UAE Tamil Web

முக்கியச் செய்தி: இந்தியா – அமீரகம் இடையேயான விமானப் போக்குவரத்திற்கு விதிக்கப்பட்ட தடை மறு அறிவிப்பு வரும்வரையில் தொடரும் – அரசு அறிவிப்பு..!

NAT-INDIA-AIRPORT-

கொரோனா காரணமாக இந்தியா – அமீரகம் இடையேயான விமானப் போக்குவரத்திற்கு கடந்த ஏப்ரல் 24 ஆம் தேதி இரவு 11.59 மணிமுதல் அடுத்த 10 நாட்களுக்கு தடை விதிப்பதாக அமீரக அவசரநிலை நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்திருந்தது.

பின்னர் இந்தத் தடை மே 14 ஆம் தேதிவரையில் நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மறு அறிவிப்பு வரும் வரையில் இந்தத் தடை அமலில் இருக்கும் என அமீரக அவசரநிலை நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையம் குறிப்பிட்டுள்ளது.

இருப்பினும் அமீரகத்தில் இருந்து இந்தியா செல்பவர்கள் தங்களது பயணத்தினை மேற்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல கடந்த 14 நாட்களில் இந்தியா வழியாக பயணித்த யாரும் அமீரகத்தின் எந்தவொரு பகுதி வழியாகவும் பயணிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றுவதன் மூலம், சில குறிப்பிட்ட பிரிவினருக்கு இந்தத் தடையில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அமீரக குடிமக்கள், டிப்ளமேடிக் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள், அரசு உயர் அதிகாரிகள், வணிக விமானங்கள் வைத்திருப்பவர்கள் மற்றும் கோல்டன் ரெசிடன்ஸி விசா வைத்திருப்பவர்கள் இந்தியா – அமீரகம் இடையே பயணிக்கலாம்.

இந்தியா – அமீரகம் இடையே பயணிக்க அனுமதிபெற்றவர்கள் தங்களது பயண நேரத்திற்கு முன்பான 48 மணிநேரத்திற்குள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட மையத்தில் எடுக்கப்பட்ட கொரோனா நெகட்டிவ் சான்றிதழை வைத்திருக்கவேண்டும். அதில் QR Code இருத்தல் வேண்டும்.

மேலும், 10 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ளுதல், அமீரகம் வந்தவுடன் PCR பரிசோதனை எடுத்துக்கொள்தல், அமீரகத்திற்குள் நுழைந்த 4 மற்றும் 8 வது நாள் மீண்டும் PCR பரிசோதனை எடுத்துக்கொள்தல் ஆகிய கொரோனா விதிமுறைகளை சமரசமின்றி இவர்கள் கடைபிடிக்கவேண்டும்.