UAE Tamil Web

முக்கியச் செய்தி: இந்தியா – அமீரகம் இடையேயான விமானப் போக்குவரத்துத் தடையை மேலும் நீட்டித்தது அமீரக அரசு..!

Airport

இந்தியாவில் கொரோனா தாக்கம் அதிகமாக இருக்கும் காரணத்தால் இந்தியா – அமீரகம் இடையேயான பயணிகள் விமானப் போக்குவரத்தை ஏப்ரல் 25 ஆம் தேதிமுதல் 10 நாட்களுக்கு ரத்து செய்வதாக அமீரக அரசு முன்னர் அறிவித்திருந்தது.

அதன்பின்னர் வெளியிடப்பட்ட அறிக்கையில் மறு அறிவிப்பு வரும் வரையில் இந்தத் தடை அமலில் இருக்கும் என அமீரக அவசரநிலை நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்திருந்தது.

பின்னர் துபாயை மையமாகக்கொண்டு இயங்கும் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் இந்தியா – அமீரகம் இடையேயான போக்குவரத்துதடையை ஜூன் 14 ஆம் தேதிவரை நீட்டிப்பதாக அறிவித்திருந்தது. அதற்பின்னர் இந்தத் தடையை ஜூன் 30 ஆம் தேதிவரையில் நீட்டிப்பதாக அந்நிறுவனம் அறிவித்திருந்த நிலையில் அமீரக விமானப் போக்குவரத்து ஆணையம் புதிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது.

அதன்படி, இந்தியா – அமீரகம் இடையேயான விமானப் போக்குவரத்துத் தடை ஜூலை 6 ஆம் தேதிவரையில் நீட்டிக்கப்பட்டுள்ளதாக ஆணையத்தின் அறிக்கையில் சுட்டப்பட்டுள்ளது.

இந்தியாவைச் சேர்ந்த விமான நிறுவனமான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் தனது இணையதளத்தில் இதனை உறுதிசெய்துள்ளது. மேற்கண்ட தேதிகளில் விமான டிக்கெட் முன்பதிவு செய்தவர்கள் எதிர்வரும் காலத்திற்கு ஏற்றவாறு இந்த டிக்கெட்டை முன்பதிவு தேதியை மாற்றிக்கொள்ளுமாறு அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தத் தடையில் அமீரக குடிமக்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.