UAE Tamil Web

30 ஆண்டுகள் அமீரகத்தில் பணியாற்றிய இந்திய ஆசிரியர் கொரோனாவால் மரணம் – கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தும் பள்ளிக்குழந்தைகள்..!

anita jeyakkumaar

அமீரகத்தில் உள்ள ஜெம்ஸ் அவர் ஓன் இந்தியன் பள்ளியில் (OIS) 30 ஆண்டுகளாக பணிபுரிந்துவந்த அனிதா ஜெயக்குமார் ஆசிரியை கொரோனா காரணமாக கடந்த வெள்ளிக்கிழமை இந்தியாவில் மரணத்திருப்பது பள்ளியின் முன்னாள் மற்றும் இந்நாள் மாணவ/ மாணவியர் மற்றும் ஆசிரியர்களிடையே பெரும்சொகத்தை ஏற்படுத்தியுள்ளது.

“கடந்த 1991 ஆம் ஆண்டு ஏப்ரல் 20 ஆம் தேதி OIS பள்ளியில் மலையாளம் ஆசிரியராக பணிக்குச் சேர்ந்தார் அனிதா. பள்ளி நிறுவப்பட்ட ஆரம்பகாலம் அது. அன்றைய நாள் முதல் பள்ளி பல்வேறு இன்னல்களைச் சந்தித்தபோதும் உறுதுணையாக இருந்தவர் அனிதா” என பள்ளியின் முதல்வர் லலிதா சுரேஷ் தெரிவித்தார்.

தற்போது 60 வயதான அனிதா கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தனது வேலையை ராஜினாமா செய்துவிட்டு சொந்த ஊரான திருச்சூருக்குத் திரும்பியிருக்கிறார். அவரது கணவர் பணியிலிருந்து ஓய்வு பெற்றதால் இருவரும் சொந்த ஊருக்குத் திரும்பினர் என லலிதா தெரிவித்தார். இந்தத் தம்பதிக்கு இரு மகன்கள் உள்ளனர்.

இதனையடுத்து பள்ளி நிர்வாகம் தனது பேஸ்புக் பக்கத்தில் இரங்கல் செய்தி ஒன்றினையும் வெளியிட்டுள்ளது. அதில்,”ஆழ்ந்த வருத்தத்துடன், OIS குடும்பம் எங்கள் அன்பான அனிதா அவர்களின் அகால மரணத்தைப் பகிர்ந்து கொள்கிறது. எங்கள் இதயங்கள் கனமாக இருக்கின்றன, இந்த ஈடுசெய்ய முடியாத இழப்பை எந்த வார்த்தைகளும் ஆறுதல்படுத்தவோ அல்லது குறைக்கவோ முடியாது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

“மலையாள புத்தாண்டான விஷுவின் போது ஒவ்வொரு மாணவருக்கும் ஒரு நாணயத்தை அனிதா வழங்குவது வழக்கம். எனக்கும் வருடாவருடம் அளிப்பார். அப்படி அவர் கொடுத்த நாணயங்களை நான் இன்றும் பத்திரமாக வைத்திருக்கிறேன். என்னுடைய மனதிற்கு நெருக்கமான யாரோ மறைந்தது போல உணர்கிறேன். இந்தத் துயர் கொடுத்த அதிர்ச்சியில் இருந்து மீள வெகுகாலமாகும்” என லலிதா தெரிவித்தார்.

“அதுமட்டுமல்லாமல் ஒவ்வொரு மாணவரையும் தன்னுடைய சொந்த குழந்தையாகவே பார்த்தவர் அனிதா. முன்னாள் மாணவர் சங்கத்தின் தலைமைப் பொறுப்பில் இருந்தவர் என்பதால் பல மாணவர்களுக்கு அனிதா அவர்களைப் பிடிக்கும். அவரைத் தெரியாத நபர்களே பள்ளியில் இருக்க முடியாது. ஒவ்வொரு நபரிடமும் பரிவுடன் பேசும் அனிதாவை எங்களது வாழ்க்கை முழுவதும் நினைத்திருப்போம்” என லலிதா குறிப்பிட்டார்.

அனிதாவிற்கு சிறந்த ஆசிரியருக்கு வழங்கப்படும் ராஜீவ் காந்தி சிறந்த ஆசிரியர் விருது வழங்கப்பட்டிருக்கிறது. மேலும் புகழ்பெற்ற மரியம்மா வர்கீ விருதுக்கு இவரது பெயர் பரிந்துரை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பள்ளியின் மற்றொரு ஆசிரியர் பேசுகையில்,” முன்னாள் மற்றும் இந்நாள் மாணவர்கள், பெற்றோர் என அனைவரிடமும் இன்முகத்துடன் பழகக்கூடியவர் அனிதா. ஒவ்வொரு வருடமும் ஓணம் பண்டிகையின்போது குழந்தைகளுக்கான போட்டிகள் நடைபெறும். அப்போது அவரே குழந்தைகளுக்கு உடைகள் மற்றும் ஆபரணங்கள் அனைத்தையும் எடுத்துவருவார். அனிதா போன்றொரு ஆசிரியரைப் பார்ப்பது அபூர்வம்” என்றார்.

அனிதா அவர்களின் நினைவேந்தலை எதிர்வரும் நாட்களில் நடத்த இருப்பதாக பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது. பள்ளி மாணவர்கள் ஆசிரியர்கள் என பலதரப்பட்ட மக்களும் இவரது மறைவிற்கு சமூக வலைத்தளங்களில் கண்ணீருடன் அஞ்சலி செலுத்திவருகின்றனர்.

anita jeyakkumaar
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap