ஓமானில் கரையைக் கடக்க இருக்கும் ஷாஹீன் புயல் மணிக்கு 116 – 140 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வருவதால் அமீரகத்தின் கிழக்குக் கடற்கரைப் பகுதிகளில் வசிப்போர் கூடுதல் கவனத்துடன் இருக்குமாறு தேசிய அவசரநிலை நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையம் எச்சரித்துள்ளது.
மேலும், கடற்கரைகள், பள்ளத்தாக்குகள் மற்றும் தாழ்வான பகுதிகளுக்கு மக்கள் செல்லவேண்டாம் என மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அரசின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனங்கள் வழங்கும் தகவல்களை மட்டுமே நம்புமாறு மக்களை அறிவுறுத்தியுள்ளது ஆணையம்.
புயல் காரணமாக வகுப்புகளை ஆன்லைன் மூலமாக நடத்துமாறு ஹட்டாவில் உள்ள பள்ளிகளுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக அமீரக உள்துறை அமைச்சகம் ஷாஹீன் புயல் குறித்த அவசர ஆலோசனைக் கூட்டத்தை நடத்தியது. இதில், தேசிய அவசரநிலை நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையம், காவல்துறை, எமிரேட்ஸ் ரெட் கிரசன்ட் ஆகிய அமைப்புகள் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.
