37.4 C
Dubai
August 10, 2020
UAE Tamil Web

துபாயில் விபத்துக்குள்ளான பேருந்து – 2 பேர் பலி ; 12 பேர் காயம்

bus accident

ஷேக் சயீத் சாலையில் இன்று நடந்த விபத்தில் 2 பேர் உயிரிழந்ததாகவும், 12 பேர் காயமடைந்துள்ளதாகவும் துபாய் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

காலை 8.30 மணியளவில், 14 இருக்கைகள் கொண்ட பேருந்து ஒன்று ஜெபேல் அலி செல்லும் வழியில் இருக்கும் அல் மனரா பாலத்தில் இருந்த சாலைத் தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானதாக துபாய் காவல்துறையின் போக்குவரத்துத் துறை இயக்குனர் பிரிகேடியர் சைஃப் முஹைர் அல் மஸ்ரூய் தெரிவித்துள்ளார்.

“தடுப்பில் மோதியதன் பாதிப்பில் பேருந்து கவிழ்ந்ததோடு, விபத்து நேர்வதற்கு முன்பு பேருந்து தீப்பிடித்து எரிந்துள்ளது. இந்த விபத்தில் இரண்டு பேர் பலியாகியுள்ளனர்.” என அல் மஸ்ரூய் தெரிவித்துள்ளார்.

போக்குவரத்தை சீர் செய்யவும், காயம்பட்டவர்களை மருத்துவமனைக்கு அனுப்பவும் அவசர சேவைக் குழுவினர் விபத்து நிகழ்ந்த இடத்திற்கு உடனே சென்றனர்.

விபத்து எதனால் ஏற்பட்டது என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை எனினும் தடுப்பில் மோதுவதற்கு முன்னர் ஓட்டுநர் திடீரென வாகனத்தைத் திசை திருப்ப முயன்றதாக போலீசார் நம்புகின்றனர்.

அல் கவானீஜ் சாலையில் நிகழ்ந்த மற்றொரு விபத்து

இந்நிலையில், இன்று காலை 10.50 மணியளவில் நிகழ்ந்த மற்றொரு சம்பவத்தில், அல் கவானீஜ் சாலையில் ஒரு கார், லாரி மீது மோதியதன் விளைவாக ஏற்பட்ட விபத்தில் கார் ஓட்டுநர் பலத்த காயமடைந்துள்ளார் .

“இந்த விபத்தில் பாதிக்கப்பட்ட ஓட்டுநர் காருக்குள்ளேயே சிக்கிக் கொண்டார். மீட்புக் குழுக்கள் விரைந்து வந்து அவரை மீட்டு ரஷீத் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.” என அல் மஸ்ரூய் தெரிவித்துள்ளார்.

ஓட்டுநர்கள் வாகனம் ஓட்டும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும், போக்குவரத்து வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் எனவும் துபாய் காவல்துறை வலியுறுத்தியுள்ளது.

“வாகன ஓட்டுநர்கள் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். வாகனம் ஓட்டும்போது கவனத்தை சிதற விடக்கூடாது.” என்று அல் மஸ்ரூய் கூறியுள்ளார்.

இதையும் படிங்க.!