UAE Tamil Web

காவல்துறை மற்றும் போதைப்பொருள் கும்பல் இடையே மோதல் – தட்டித் தூக்கிய காவல்துறை அதிகாரிகள்..!

justice

அஜ்மானில் போலீசாரை தாக்கி விட்டு தப்பிச் சென்ற போதைப் பொருள் கடத்தல்காரர்களை போலீசார் கைது செய்தனர்.

போதைப் பொருள் விற்பனை நடப்பது குறித்து அஜ்மான் போலீசார் விசாரணை செய்து கொண்டிருந்தனர். விசாரணையில் ஒரு நபரை குறித்த திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளது. அந்த சந்தேகத்திற்கிடமான நபர் ஒரு குறிப்பிட்ட இடத்தில் போதை பொருளை மறைத்து வைத்து விட்டு, சமூக வலைதளங்கள் வழியாக போதை பொருளுக்கு அடிமையானவர்களிடம் பேசி, போதை பொருள் மறைத்து வைக்கப்பட்ட இடத்தின் புகைப்படத்தை அனுப்பி அதன் மூலம் போதைபொருளை விற்பனை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து அந்த நபரை கண்டறிந்த போலீசார் அவரிடம் தன்னுடைய போலீஸ் அடையாள அட்டையை காண்பித்து அவனுடைய குடியிருப்பாளர் அடையாள அட்டையை காண்பிக்குமாறு கேட்டுள்ளார். அதற்கு அவன் போலீசாரின் பேச்சை கேட்க மறுத்து அவரை கடுமையாக தாக்கியுள்ளான்.

இந்த சம்பவம் நடந்து கொண்டிருக்கும் போதே அரபு நாட்டைச் சேர்ந்த பல ஆண்கள் ஒரு குழுவாக சேர்ந்து வந்து அங்கிருந்த காவல்துறை அதிகாரிகளை கடுமையாக தாக்கி அவமானப்படுத்தியுள்ளனர். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி முதலில் போலீசாரை தாக்கிய குற்றவாளி சம்பவ இடத்திலிருந்து தப்பி சென்றான். சிறிது நேரத்தில் தாக்குதல் நடத்திய மற்றவர்களும் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

இச்சம்பவத்தையடுத்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். தப்பி ஓடிய முதல் குற்றவாளி அவனது வீட்டில் பதுங்கியிருப்பது தெரியவந்ததையடுத்து நீதிமன்ற உதவியுடன் ஆயுதமேந்திய போலீசார் அவனது வீட்டை சுற்றி வளைத்து துப்பாக்கி முனையில் அவனை கைது செய்தனர். அதுமட்டுமின்றி போலீசாரை தாக்கிய அவனது கூட்டாளி ஒருவனையும் மடக்கிப்பிடித்தனர்.

இந்த வழக்கை விசாரித்த அஜ்மான் குற்றவியல் நீதிமன்றம் போலீசாரை தாக்கிய அரபு நாட்டை சேர்ந்த முதல் குற்றவாளிக்கு 3 ஆண்டுகள் சிறைதண்டனையுடன் 20,000 திர்ஹம்ஸ் அபராதமும், அவனுடன் இருந்த கூட்டாளிக்கு 6 மாத காலம் சிறை தண்டனை விதித்ததோடு, தண்டனை காலம் முடிந்த பின்னர் இருவருமே நாட்டை விட்டு வெளியேறவும் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.