கடந்த ஆகஸ்டு 7 ஆம் தேதி மஹ்சூஸ் டிராவின் 37 வது குலுக்கல் நடைபெற்றது. இதில் 2 மில்லியன் திர்ஹம்ஸ் தொகைக்கான வெற்றியாளர்களாக கேரளாவைச் சேர்ந்த அமீரக வாழ் பெண்ணான தீபா மற்றும் துபாயில் வசித்துவரும் புதுச்சேரியைச் சேர்ந்த பரணிதரன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
இருவரும் 1-12-22-23-41-48 என்ற எண்ணைக் குறிப்பிட்டிருந்தார்கள். மொத்தமுள்ள 6 எண்களில் ஐந்தை சரியாக தேர்ந்தெடுத்திருந்த இருவருக்கும் தலா 1 மில்லியன் திர்ஹம்ஸ் பரிசாக அளிக்கப்படுவதாக மஹ்சூஸ் நிர்வாகம் அறிவித்தது.
இனி கவலையில்லை..
கேரளாவில் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ள தனது தந்தையை வெகுநாட்கள் கழித்து பார்க்கச் சென்றிருக்கிறார் தீபா. அப்போது, அவருக்கு இந்த வெற்றி குறித்த மின்னஞ்சல் அனுப்பப்பட்டிருக்கிறது. 50 வயதாகும் தீபா, சந்தை ஆய்வு நிறுவனமொன்றில் பணிபுரிந்துவருகிறார். இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இதுகுறித்துப் பேசிய அவர்,” அப்பாவின் மருத்துவச் செலவு அதிகரித்தவண்ணம் இருந்தது என்னை மிகவும் கவலைகொள்ளச் செய்தது. இத்தகைய நேரத்தில்தான் இந்த ஜாக்பாட் தொகை எனக்குக் கிடைத்திருக்கிறது. எனக்குள் பீறிடும் மகிழ்ச்சியை என்னால் வார்த்தைகளால் விவரிக்க முடியவில்லை. எனது குழந்தைகளின் எதிர்காலத்தை சிறப்பாக்க இந்தப் பணத்தை செலவிட இருக்கிறேன்” என்றார்.
அதிர்ஷ்டமான நாள்
புதுச்சேரியைச் சேர்ந்த பரணிதரன் தனக்கு 7 மிகவும் ராசியான எண் என்கிறார். இதுகுறித்துப் பேசிய அவர்,” ஆகஸ்டு 7 அன்று, மஹ்சூசின் 37 வது டிராவில் இந்த வெற்றி எனக்குக் கிடைத்திருக்கிறது. எனக்கு 7 ஆம் எண் மிகவும் ராசியானது. இந்தத் தொகையைக்கொண்டு என்னுடைய பெற்றோரை அமீரகம் அழைத்துவந்து என்னோடு தங்கவைத்துக்கொள்வேன்” என்றார்.
“அமீரகத்தில் வேலைக்காக வரும் பல தமிழர்களும் தங்களது வயதான அப்பா அம்மாவை நினைத்து கலங்குவதை நான் பார்த்திருக்கிறேன். என்னுடைய பல நாள் ஏக்கத்தை தீர்த்துவைத்த மஹ்சூஸ் டிராவிற்கு எனது நன்றி” என பரணிதரன் தெரிவித்தார்.
