UAE Tamil Web

அமீரகம்: எதிர்பாராத விபத்தில் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்ட தமிழர் – 2 லட்சம் திர்ஹம்ஸ் இழப்பீட்டுத் தொகையைக் கட்டி வெளியே எடுத்த அமீரக மக்கள்..!

NAT-210429-Dar-Al-Ber-Donation

2017 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் துபாயில் நடைபெற்றுக்கொண்டிருந்த ஒரு வில்லா கட்டுமானப் பணியில் விபத்து நேர்ந்திருக்கிறது. இதில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த உத்பல் மாலிக் (42) படுகாயமடைந்ததன் விளைவாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனையடுத்து காவல்துறை வழக்குப் பதிவு செய்து, நீதிமன்ற விசாரணையும் நடைபெற்றது. அதில், கட்டுமான நிறுவனத்தில் பொறியாளராக பணியாற்றிய தமிழகத்தைச் சேர்ந்த பாரதிராஜா (33) மற்றும் பாதுகாப்பு அதிகாரியான உத்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஷானே ஹைதர் (45) ஆகியோரை குற்றவாளி என தீர்ப்பளித்தது.

இருப்பினும் இழப்பீட்டுத் தொகையை இறந்தவரின் குடும்பத்திற்கு வழங்கினால் வழக்கில் இருந்து விடுவிக்கப்படுவீர்கள் என நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது. இதற்கு இறந்தவரின் குடும்பம் மன்னிப்பு அளிக்கவேண்டும். ஆனால் உத்பலின் மகள் அப்போது மைனர் என்பதால் அதற்கு வாய்ப்பில்லாமல் போனது. அடுத்த சிக்கலாக இவர்களுடைய நிறுவனமும் பண நெருக்கடியால் மூடப்பட்டிருக்கிறது. இதனால் ஹைதர் மற்றும் பாரதிராஜா என இருவருமே காத்திருக்க வேண்டியதாயிற்று.

Dar-Al-Ber-Donation
Image Credit: Gulf News

இதனையடுத்து தர் அல் பெர் (Dar Al Ber) சமூகம் ஹைதர் – பாரதிராஜாவிற்கு உதவ முன்வந்திருக்கிறது. ரமலான் மாதத்தில் இவர்களுக்காக நிதி திரட்டியிருக்கிறது இந்த அமைப்பு. அமீரகத்தைச் சேர்ந்த பல்வேறு மக்கள் இதற்கு நிதி அளித்துள்ளார்கள். இதன்மூலம் 2 லட்சம் திர்ஹம்ஸ் நிதி சேகரிக்கப்பட்டு துபாய் நீதிமன்றத்தில் செலுத்தப்பட்டிருக்கிறது. இதன்காரணமாக ஹைதர் மற்றும் பாரதிராஜா ஆகியோரை இந்த வழக்கில் இருந்து விடுவிப்பதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.

ஆண்டுக்கணக்கில் இந்தத் தருணத்திற்காக காத்திருந்த இருவரும் கண்ணீர் மல்க அமீரக மக்களுக்கு நன்றி தெரிவித்திருக்கின்றனர். இருவரிடமும் பாஸ்போர்ட் திருப்பியளிக்கப்பட்டவுடன், ஹைதர் அதனை தனது வாட்சாப் ஸ்டேட்டசில் வைத்திருக்கிறார். இதனைப் பார்த்து அவரது குடும்பம் ஆனந்தத்தில் துள்ளிக்குதித்திருக்கிறது. இதுகுறித்துப் பேசிய ஹைதர்,” எனது மகள் தான் ஸ்டேட்டசை முதலில் பார்த்தாள். நான் ஊருக்கு வரப்போகிறேன் என அவளிடம் சொன்னபோது மகிழ்ச்சியினால் அவள் அழத் தொடங்கினாள். அப்போது நானும் அழுதிருந்தேன். இதனை சாத்தியமாக்கிய தர் அல் பெர் அமைப்பிற்கும், தன்னார்வலர்கள், இந்திய தூதரகம், துணைத் தூதரகம், அமீரக மக்கள் ஆகியோருக்கு நன்றி” என்றார்.

தமிழகத்தைச் சேர்ந்த பாரதிராஜா இதுகுறித்துப் பேசுகையில்,” எங்களுக்கு வாழ்க்கையின் புதிய அத்தியாயம் தொடங்கியிருக்கிறது. இதற்குக் காரணம் தர் அல் பெர் அமைப்பும் அமீரக மக்களுமே. 2004 ஆம் ஆண்டிலிருந்து எனது குடும்பத்தை அமீரகமே வாழ வைத்திருக்கிறது. என்னுடைய பாஸ்போர்ட்டை கையில் வாங்கியவுடன் எனது குடும்பத்திற்குப் போன் செய்தேன். மறுமுனையில் எனது சகோதரர் ஹலோ என்றதும் என்னால் அழுகையை அடக்க முடியவில்லை. நீண்டநேரம் நான் அழுதுகொண்டே இருந்தேன். எனது குடும்பம் தான் என்னை சமாதானப்படுத்தியது. அமீரக மக்களின் ஈகை குணம் அளித்த வாழ்வு இது. அவர்கள் எனக்காக நிதியுதவி அளிக்கவில்லை எனில் என்னால் இதிலிருந்து வெளியேறியிருக்க முடியாது. இப்போதுள்ள சூழ்நிலையில் எனக்கு வேலை இல்லை. ஆனால் ஒன்றுமட்டும் சொல்கிறேன். அடுத்து நான் எங்கு, என்ன வேலையில் சேர்ந்தாலும் என்னுடைய முதல்மாத சம்பளத்தில் இருந்து 1000 திர்ஹம்ஸ் தொகையை  தர் அல் பெர் அமைப்பிற்கு நன்கொடையாக அளிப்பேன். எனக்கு மறுவாழ்வை அளித்த மக்களுக்கு என்னால் முடிந்த உதவியை நான் நிச்சயம் செய்வேன்” எனச் சொல்லும்போது அவரது கண்ணில் இருந்து கண்ணீர் வழிந்தோடின.

ஹைதர் மற்றும் பாரதிராஜா ஆகியோரின் விசா கேன்சல் செய்யப்பட்டு இருவரும் விரைவில் நாடு திரும்புவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

NAT-210429-Dar-Al-Ber-Donation
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap