UAE Tamil Web

இன்ஸ்டாகிராம் மோகத்தால் வந்த வினை – கள்ள நோட்டை சாலையில் வீசிய இருவருக்கு ஓராண்டு சிறை, 2 லட்சம் திர்ஹம்ஸ் அபராதம்!

இன்ஸ்டாகிராமில் பிரபல்யமாக இளைஞர்கள் பல சேட்டைகள் செய்வது தொடர் கதையாகி வருகிறது. துபாயில் ஆசிய மற்றும் ஐரோப்பிய நாட்டைச் சேர்ந்த இருவர் தங்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்திற்கு அதிக ஃபாலோயர்ஸ்களை ஈர்க்கும் விதமாக புதிய முயற்சி ஒன்றை மேற்கொண்டது தற்போது அவர்களுக்கே வினையாக அமைந்துள்ளது. துபாயில் காரில் இருந்த வண்ணம் 50,000 யூரோ கள்ள நோட்டுகளை இருவரும் சாலையில் வீசி எறிந்துள்ளனர். இதனை கண்ட ஒருசிலர் முந்தியடித்துக் கொண்டு நோட்டுகளை எடுக்க விரைந்தனர். இதனை வீடியோவாக எடுத்து இளைஞர்கள் சமூக வலைத்தளங்களில் பரப்பினர். தகவலறிந்து துபாய் சைபர் க்ரைம் போலீசார் இளைஞர்கள் இருவரையும் தேடிச் சென்று கைது செய்தனர். இன்ஸ்டாகிராம் மோகத்தாலேயே இப்படி ஒரு காரியத்தை செய்ததாக இளைஞர்கள் வாக்குமூலம் அளித்தனர். மக்களை ஏமாற்றியது, விபத்து ஏற்படுத்தும் வண்ணம் செயல்பட்டது, கொரோனா தடுப்பு விதிகளை மீறியது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் இளைஞர்கள் இருவரும் ஓராண்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் அவர்களுக்கு 2 லட்சம் திர்ஹம்ஸ் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இன்ஸ்டாகிராம் மோகத்தில் சுற்றித்திரியும் இளசுகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக இளைஞர்கள் இருவருக்கு துபாய் நீதிமன்றம் கடுமையான தண்டனையை வழங்கியுள்ளது.

0 Shares
Share via
Copy link