ஷார்ஜாவின் அல் ஹம்ரியா சாலையில் இன்று அதிகாலையில் மூன்று ட்ரக்குகள் நேருக்கு நேர் மோதியதால் இருவர் உயிரிழந்திருக்கின்றனர். உயிருக்கு ஆபத்தான சூழ்நிலையில் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்துப் பேசிய அல் ஹம்ரியா காவல்நிலையத்தின் இயக்குனர் கர்னல் அலி அல் ஜலாஃப்,” ஷேக் முகமது பின் சயீத் சாலையில் இன்று காலை 3 மணிக்கு மூன்று ட்ரக்குகள் மோதி விபத்து ஏற்பட்டுள்ளதாக காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தேசிய ஆம்புலன்ஸ் விபத்தில் படுகாயமடைந்த ஒருவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றது. விபத்தில் ஆசியாவைச் சேர்ந்த இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருக்கின்றனர்” என்றார்.
வாகனங்களுக்கு இடையே போதிய இடைவெளி இல்லாதததே இவ்விபத்திற்கு காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மோதலின் காரணமாக ஒரு ட்ரக்கில் தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது.
உம் அல் குவைன் தீயணைப்பு நிலையத்திலிருந்து விரைந்துவந்த வீரர்கள் தீயை கட்டுப்படுத்தினர்.
விபத்தில் உயிரிழந்த இருவரின் உடல்கள் பிணக்கூறாய்விற்காக மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டிருக்கிறது.