UAE Tamil Web

39-வது மாடியிலிருந்து குதித்து இளம்பெண் பலி..! ஷார்ஜாவில் தொடரும் மர்ம மரணங்கள்..!

sharjah

ஷார்ஜாவில் 17 வயது இளம்பெண் 39-வது தளத்திலிருந்து கீழே விழுந்து இறந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

அமீரகத்தில் உள்ள அமெரிக்கன் பள்ளியில் 11 ஆம் வகுப்பு பயின்று வரும் 17 வயது அரபு நாட்டைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் ஷார்ஜாவின் அல் கான் கார்னிச் பகுதியின் உயரமான குடியிருப்பின் 39வது தளத்தில் இருந்து கீழே குதித்து இறந்துள்ளார் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

கடந்த வியாழன் இரவு 9 மணிக்கு ஷார்ஜா போலீசாருக்கு இச்சம்பவம் குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக இளம்பெண்னை காப்பாற்ற சம்பவ இடத்திற்கு ஷார்ஜா போலீசார் மற்றும் மீட்பு குழு விரைந்து வந்தனர். துரதிஷ்டவசமாக தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் மீட்பு குழு அவ்விடத்திற்கு வருவதற்கு முன்பாகவே அந்த பெண் இறந்து விட்டாள்.

17 வயது இளம்பெண்ணின் இச்செயலுக்கு என்ன காரணமாக இருக்கக்கூடும் என்று ஷார்ஜா போலீசார் வழக்கு பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுகுறித்து பெண்ணின் உறவினர்கள் மற்றும் நண்பர்களிடமும் போலீசார் விசாரித்து வருகின்றனர். இவ்வழக்கானது முழு கட்ட விசாரணைக்காக ஷார்ஜா பொது வழக்கு நீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

ஷார்ஜாவில் இச்சம்பவம் நடந்த இதே நாளில் குடும்ப தகராறு காரணமாக 4 வது மாடியில் இருந்து இந்திய பெண் ஒருவர் கீழே குதித்து இறந்தது குறிப்பிடத்தக்கது.