உலகின் மிகவும் பரபரப்பான விமான நிலையங்களில் ஒன்றான துபாய் சர்வதேச விமான நிலையம் வரும் வாரங்களில் மிகவும் நெரிசலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நபி (ஸல்) பிறந்தநாளை முன்னிட்டு அமீரகத்தில் 3 நாட்கள் விடுமுறை வர இருக்கிறது.
இதனையடுத்து அமீரகத்திலிருந்து பலரும் வெளிநாடுகளுக்கு பயணிக்க விண்ணப்பித்து வருகிறார்கள். ஆர்மீனியா, செர்பியா ஆகிய நாடுகளுக்கு சுற்றுலா செல்ல அமீரக மக்கள் விரும்புவதால் DXB ல் மக்கள் கூட்டம் அதிகரிக்க வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல, தீபாவளி, அமீரக தேசிய தினம் என அடுத்தடுத்து விடுமுறை காரணமாக துபாய் விமான நிலையத்திற்கு வரும் பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்க இருக்கிறது.
துபாயை மையமாகக்கொண்டு இயங்கிவரும் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் பயணிகள் தங்களது பயண நேரத்திற்கு சில மணி நேரத்திற்கு முன்பே விமான நிலையத்திற்கு வந்துவிட வேண்டும் எனவும் கூட்ட நெரிசலால் கடைசி நேர பதட்டத்தை தவிர்க்க இது உதவும் எனவும் அந்நிறுவனம் தெரிவித்திருந்தது.
துபாய் விமான நிலையத்தின் 3 வது டெர்மினலில் இந்த வார இறுதியில் மட்டும் 1.9 லட்சம் பேர் பயணிப்பார்கள் என எமிரேட்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆகவே, பயணம் மேற்கொள்ள இருப்பவர்கள் விவேகமாக செயல்படுவது நல்லது.
