அபுதாபியில் இன்று முசாஃபா பகுதியில் ஏற்பட்ட டேங்கர் விபத்தில், 2 இந்தியர்கள் உட்பட 3 பேர் உயிரிழந்தனர். 6 பேர் காயமடைந்தனர்.
இன்று காலை அபுதாபியின் முசாஃபாவில் மூன்று பெட்ரோலிய டேங்கர்களில் ஏற்பட்ட வெடி விபத்தில் இரண்டு இந்தியர்கள், ஒரு பாகிஸ்தானியர் என 3 பேர் உயிரிழந்ததாகவும், 6 பேர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காயமடைந்தவர்களுக்கு லேசானது முதல் மிதமான வரை காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். ADNOC சேமிப்பு தொட்டிகளுக்கு அருகில் உள்ள ICAD 3-ல் ஏற்பட்ட தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
அபுதாபி சர்வதேச விமான நிலையத்தின் புதிய கட்டுமானப் பகுதியில் இன்று காலை மற்றொரு தீ விபத்து நிகழ்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு தீ விபத்துகளுக்கும் ஆளில்லா விமானங்கள் காரணமாக இருக்கலாம் என முதற்கட்ட விசாரணைகள் தெரிவிக்கின்றன. தீ விபத்து நடப்பதற்கு முன்பு பறக்கும் பொருட்கள் இரண்டு பகுதிகளிலும் விழுந்ததாக அபுதாபி காவல்துறை தெரிவித்துள்ளது.