UAE Tamil Web

ராஸ் அல் கைமாவில் பள்ளத்தாக்கில் சிக்கி தவித்தவர்களை சாமர்த்தியமாக மீட்ட காவல்துறை..!

valley

ராஸ் அல் கைமாவில் உள்ள வாடிஷா பகுதியின் ஆழமான பள்ளத்தாக்கில் சிக்கிக் கொண்ட எட்டு பேரை கச்சிதமாக செயல்பட்டு காவல் துறையினர் மீட்டுள்ளனர்.

ராஸ் அல் கைமா காவல்துறையின் ஏர் விங் பிரிவு, சிவில் பாதுகாப்பு துறை மற்றும் அமீரகத்தின் சில குடியிருப்பாளர்களின் ஒத்துழைப்புடன் வாடிஷா பள்ளத்தாக்கில் சிக்கித் தவித்த பல்வேறு நாடுகளைச் சேர்ந்த நாடுகளைச் சேர்ந்த 8 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

வாடிஷா பகுதியின் பள்ளத்தாக்கில் சிலர் சிக்கித் தவிப்பதாக ராஸ் அல் கைமா காவல்துறையின் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புக்குழு அவர்களை கண்டறிந்து அவர்களுக்கு தேவையான முதலுதவி அளித்தது. பின்பு அங்கிருந்து அவர்களை அருகிலிருந்த குறைந்த கரடுமுரடான பகுதிக்கு கொண்டு சென்றனர், அதன் பின்பு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இதையடுத்து ராஸ் அல் கைமா காவல்துறை பொதுமக்களை கரடுமுரடான மலைப் பகுதி மற்றும் பள்ளத்தாக்கு பகுதிகளுக்கு இந்த வறண்ட வெயில் காலகட்டத்தில் செல்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தியுள்ளது.

அதேபோல் சுற்றுலா பயணிகளும், மலை ஏறுபவர்களும் தங்களைத் தற்காத்துக் கொள்வதற்கும், பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் தங்கள் பயணங்களை தொடங்குவதற்கு முன்பு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டும் என்று காவல்துறையினர் கேட்டுக்கொண்டனர்.

மேலும் எந்த ஒரு அவசர காலத்திலும் மீட்புக் குழுக்கள் அவர்களை எளிதில் கண்டறிய கூடிய வகையில் அவர்கள் தாங்கள் செல்லும் இடங்களைக் முன்கூட்டியே அதிகாரிகளுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்றும் கூறினர்.

இதுகுறித்து மேஜர் ஜெனரல் அலி அப்துல்லா பின் அல்வான் அல் நுவைமி கூறுகையில், பொதுமக்கள் இது போன்ற இடங்களுக்கு செல்லும் போது தேவையான உணவு, தண்ணீர், மொபைல் போன், சேட்டிலைட் போன் மற்றும் விசில் போன்ற அத்தியாவசிய பொருட்களை உடன் எடுத்துச் செல்லுமாறும் செல்லுமிடங்களில் கரடு முரடான பாதைகளை தவிர்க்குமாறும் அறிவுறுத்தினார்.

மேலும் சிக்கி தவித்தவர்களை குறித்த நேரத்தில் காப்பாற்றிய மீட்பு குழுவையும் அல் நுவைமி பாராட்டினார்.

valley
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap