அபுதாபியின் அபு முரேகா பகுதியில் கட்டப்பட்டு வரும் பிரம்மாண்ட இந்துக் கோவிலின் அஸ்திவாரம் அமைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளன. இங்கே வைக்கப்படும் சிற்பங்கள் அனைத்தும் இந்தியாவில் செதுக்கப்பட்டு கடல் மார்க்கமாக துபாய் DP Wordld நிறுவனத்தின் துணையுடன் அமீரகத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளன.
இந்நிலையில் சமீபத்தில் இக்கோவில் கட்டுமானப்பணியின் வடிவியல் பொறியாளர் (Structural Engineer) டாக்டர். காங் சியா கேயாங் இந்தக் கோவில் குறைந்தபட்சம் 1000 வருடங்களுக்கு தாக்குப்பிடிக்கும் வகையில் கட்டப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும், கோவிலின் அமைப்பு சிறிய புறாவின் வடிவில் அமைந்துள்ளதாகவும், கட்டிடத்தின் மேற்புறத்தில் நின்று ஆய்வு மேற்கொள்ளும்போது யானையின் முதுகெலும்பு ஒன்றின் மீது நிற்கும் எண்ணம் ஏற்பட்டதாகவும் கூறியிருக்கிறார்.
“1000 வருடம் நிலைத்து நிற்கக்கூடிய இந்த கோவிலின் திருப்பணியில் நானும் ஓர் அங்கமாக பணிபுரிவது எனக்கு பெருமகிழ்ச்சியை அளிக்கிறது” என அவர் தெரிவித்தார்.
இந்தியாவின் பாரம்பரிய சிற்ப சாஸ்திரத்தின் அடிப்படையில் இரும்பு இல்லாமல் கோவிலின் அஸ்திவாரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. சிமெண்ட் மற்றும் கான்கிரீட் தேவையில் 55% அளவிற்கு Fly Ash எனப்படும் சாம்பல் இந்தக் கட்டுமானத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
கூடுதலாக, 10 நாடுகளைச் சேர்ந்த 30 நிபுணர்கள் பல்வேறு சாப்ட்வேர் மூலமாக கோவிலின் அழுத்தம், அதிர்வு உள்ளிட்டவற்றைக்கொண்டு மாடல் செய்திருக்கிறார்கள். இது இந்திய கோவில் கட்டுமானப் பணி வரலாற்றிலேயே புதிதாகும்.
அழுத்தம், வெப்பம், அதிர்வு ஆகியவற்றைக் கண்காணிக்க 300 வெவ்வேறு இடங்களில் சென்சார்கள் பொருத்தப்பட்டு வடிவமைப்பில் துல்லியத்தன்மையை ஏற்படுத்தியிருக்கிறார்கள் நிபுணர்கள். ஆகவே, அமீரக மற்றும் இந்திய வரலாற்றில் இந்த அபுதாபி இந்துக்கோவில் முக்கிய இடம் பெறப்போகிறது என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.
