UAE Tamil Web

அமீரகத்தில் நிறுவனங்களை துவக்க வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு இனி எமிராட்டி ஸ்பான்சர்கள் தேவையில்லை.! அமலுக்கு வருகிறது புதிய சட்டம்

uae

வெளிநாட்டினருக்கு 100 சதவீதம் வணிகங்களின் உரிமையை அளிக்கும் புதிய விதி வரும் டிசம்பர் 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வருவதாக அமீரகம் அறிவித்துள்ளது. அமீரக ஜனாதிபதியான பெருமதிப்பிற்குரிய ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யான் உத்தரவின் பேரில் இது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

- Advertisment -

2015-ஆம் ஆண்டின் வணிக நிறுவனங்கள் சட்டம் 2-ன் கீழ், வெளிநாட்டு பங்குதாரர்கள் ஒரு நிறுவனத்தில் அதிகபட்சமாக 49% உரிமையும், எமிராட்டி தனிநபர் அல்லது நிறுவனம்(ஸ்பான்சர்) மீதமுள்ள 51% உரிமையையும் வைத்திருக்க வேண்டும் என்பது நடைமுறையில் இருந்து வந்தது. இந்நிலையில் திருத்தியமிக்கப்பட்டுள்ள புதிய விதி டிசம்பர் முதல் அமலுக்கு வருவதால் இனி அமீரகத்தில் தங்களது வணிக நிறுவனங்களை துவக்கும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள், அமீரகத்தை சேர்ந்த குடிமக்களை (எமிராட்டிகளை) ஸ்பான்சர்களாக வைத்திருப்பதற்கான தேவையை அமீரகம் கைவிட்டுள்ளது.

இதனால் அமீரகத்தில் கிளைகளை திறக்க விரும்பும் நிறுவனங்கள் உள்ளூர் ஸ்பான்சர் இல்லாமல் தங்கள் வணிகத்தை பெருக்கும் முயற்சிகளில் ஈடுபடலாம். விரைவில் நடைமுறைக்கு வர உள்ள புதிய சட்டம், முதலீடுகள் மற்றும் திட்டங்களுக்கான கவர்ச்சிகரமான இடமாக பிராந்திய மற்றும் உலகளாவிய ரீதியில் அமீரகத்தின் நிலையை மேம்படுத்துவதற்கான ஒரு படியாக வருகிறது. இந்த சீர்திருத்தங்கள் அமீரகத்தை நோக்கி அந்நிய முதலீட்டை ஈர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நடவடிக்கைகள் செலவினங்களைக் குறைத்து, நாட்டில் வணிகத்தை எளிதாக்கும். இந்த மாற்றங்களுடன், ஒரு நிறுவனத்தின் தலைவராக எமிராட்டி இருப்பது கட்டாயமில்லை. இயக்குநர்கள் குழுவிலும் எமிராட்டிகள் பெரும்பான்மையாக இருக்க தேவையில்லை. இருப்பினும், எண்ணெய் மற்றும் எரிவாயு, பயன்பாடு மற்றும் போக்குவரத்து மற்றும் மூலோபாயமாகக் கருதப்படும் துறைகளில் உள்ள நிறுவனங்களுக்கு இந்த மாற்றங்களில் இருந்து விலக்கு அளிக்கப்படுகின்றன.