UAE Tamil Web

பிலிப்பைன்ஸை புரட்டிப் போட்ட கோனி புயல்.! 35 மில்லியன் திர்ஹம்ஸ் அவசர உதவியை அறிவித்த அமீரகம்..

goni

கடும் புயலால் பாதிக்கப்பட்ட பிலிப்பைன்ஸ் மக்களுக்கு உதவ அமீரகம் 35 மில்லியன் திர்ஹம்ஸ் அளவிலான அவசர உதவி திட்டத்தை அறிவித்துள்ளது.

- Advertisment -

அபுதாபியின் பட்டத்து இளவரசரும், அமீரக ஆயுதப்படைகளின் துணை உச்ச தளபதியுமான ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் அவர்களின் உத்தரவின் பேரில் மற்றும் அல் தஃப்ரா(Al Dhafra) பிராந்திய ஆட்சியாளரின் பிரதிநிதியும், எமிரேட்ஸ் ரெட் கிரசண்ட் (ERC) தலைவருமான ஷேக் ஹம்தான் பின் சயீத் அல் நஹ்யான் அவர்களின் மேற்பார்வையில், பிலிப்பைன்ஸில் டைஃபூன் கோனி புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அமீரகம் 35 மில்லியன் திர்ஹம்ஸ் மதிப்பிலான அவசர மனிதாபிமான உதவிகளை ஒதுக்கியுள்ளது.

இந்த உதவியில் பெரிய அளவிலான தங்குமிடம் உள்ளது. ERC மேற்கொண்டு வரும் உதவித் திட்டங்களின் ஒரு கட்டத்தின் ஒரு பகுதியாக, சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவான மற்றும் அவசர உதவிகளை வழங்க ஏற்பாடுகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

மிகவும் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நிவாரண நடவடிக்கைகள் மற்றும் மனிதாபிமான உதவிகளை வழங்க சம்பந்தப்பட்ட உள்ளூர் அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து, ERC தூதுக்குழு மணிலாவுக்கு சென்றது. ERC பொதுச்செயலாளர் டாக்டர் முகமது அதீக் அல் ஃபலாஹி பேசுகையில், பிலிப்பைன்ஸில் சூறாவளி தொடங்கியதிலிருந்தே ஷேக் ஹம்தான் மனிதாபிமான முயற்சிகளை முன்னெடுத்து வருகிறார்.

இது இயற்கை பேரழிவுகளின் விளைவுகளை கண்காணிப்பதற்கான அவரது ஆர்வத்தையும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ அவரது ஆர்வம் மற்றும் ஆதரவை பிரதிபலிக்கிறது. மேலும் மனிதாபிமான நெருக்கடிகளுக்கு பதிலளிப்பதில் அமீரகத்தின் முக்கிய பங்கை எடுத்துக்காட்டுகிறது என்றார்.

மேலும் பேசிய அல் ஃபலாஹி, கள அறிக்கைகள் மற்றும் உள்ளூர் மனிதாபிமான அழைப்புகளின்படி அமீரக உதவியை அனுப்புவதற்கான ஒரு திட்டம் தயாரிக்கப்படுகிறது. இது  அவசர தேவைகளை கருத்தில் கொண்டு பல கட்டங்களை உள்ளடக்கும். உதவி திட்டத்தின் முதலாம் கட்டம் தங்குமிட பொருட்கள்(shelter materials) மீது கவனம் செலுத்தும் என்றும், சுகாதாரம், உணவு மற்றும் பிற மனிதாபிமான தேவைகள் போன்ற பல்வேறு தேவைகளை வழங்க அடுத்தடுத்த கட்டங்களில் நடவடிக்கை எடுக்கப்படும் குறிப்பிட்டார்.

புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறந்த சேவைகளை வழங்க மனிதாபிமான நிலைமையை ERC தொடர்ந்து கண்காணித்து வருகிறது.