fbpx
UAE Tamil Web

பயன்பாட்டிற்கு வந்தது கொரோனா தடுப்பூசி – ஒப்புதல் அளித்த அமீரக அரசு..!

VACCINE_

கொரோனாவிற்கான தடுப்பூசி குறித்த மூன்றாம் கட்டத்தின் ஆய்வுகள் அமீரகத்தில் நடைபெற்றுவந்த நிலையில் தற்போது அந்த தடுப்பூசியை பயன்படுத்த அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

கொரோனாவினால் பாதிக்கப்பட அதிகமான வாய்ப்புகளைக் கொண்டிருக்கும் முன்னணி சுகாதாரப் பணியாளர்களுக்கு இத்தடுப்பு ஊசியை அளிக்க அமீரக அரசு அனுமதியளித்துள்ளது.

“நடைபெற்ற ஆய்வுகளில் இம்மருந்தானது வைரஸிற்கு எதிரான ஆண்டிபாடிகளை உருவாக்குவதும் ஆற்றல் மிகுந்தது எனவும் தெரியவருகிறது. மருந்தின் பாதுகாப்பு குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வு முடிவுகளும் நம்பிக்கை அளிக்கும் விதத்திலேயே வந்திருக்கின்றன. ஆகவே,  இம்மருந்தினை உபயோகிப்பது பாதுகாப்பானது” என சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்புத்துறையின் அமைச்சர் அப்துல் ரஹ்மான் அல் ஓவைஸ் (Abdul Rahman Al Owais) தெரிவித்தார்.

கொரோனா வைரசிற்கான தேசிய மருத்துவக் குழுவின் தலைவரும், கொரோனா தடுப்பூசியின் மூன்றாம் கட்ட பரிசோதனைகளின் முதன்மை ஆய்வாளருமான டாக்டர் நவல் அல்-காபி (Nawal Al-Kaabi) இதுகுறித்துப் பேசுகையில்,” மருந்தின் முதற்கட்ட ஆய்வு முடிவுகள் உத்வேகம் அளிக்கக்கூடியவையாக இருக்கின்றன. இருப்பினும் ஆய்வுகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. மற்ற மருந்துகள் ஏற்படுத்தக்கூடிய சிறிய அளவிலேயே பக்க விளைவுகள் ஏற்பட்டிருக்கின்றன. ஆபத்தான பக்க விளைவுகளோ அல்லது அறிகுறிகளோ ஏற்படவில்லை. நாள்பட்ட நோயாளிகள் 1000 பேருக்கு இம்மருந்து செலுத்தப்பட்டிருக்கிறது. அவர்களுடைய உடல்நிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை” எனத் தெரிவித்தார்.

இந்த பரிசோதனையில் 125 நாடுகளைச் சேர்ந்த 31,000 பேர் ஆறு வார காலத்திற்கு கலந்துகொண்டதாகவும் மேலும், நாள்பட்ட நோயினால் பாதிக்கப்பட்ட 1000 பேர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாகவும் நவல் பேசுகையில் குறிப்பிட்டார்.