UAE Tamil Web

அமீரகம்: சினோபார்ம் தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்களுக்கு மேலும் ஒரு பூஸ்டர் தடுப்பூசி வழங்கப்படும் – அரசு அறிவிப்பு..!

VACCINE

அமீரக அவசரநிலை நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையம் புதிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது. அதன்படி சினோபார்ம் தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் எடுத்துக்கொண்டவர்களுக்கு அதன் பூஸ்டர் தடுப்பூசி வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தடுப்பூசிகள் எடுக்கப்பட்டு ஆறுமாத கால இடைவெளியில் இந்த பூஸ்டர் தடுப்பூசி வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  சமூகத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கோடு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்துப் பேசிய அமீரக சுகாதாரத் துறையின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் டாக்டர். ஃபரிதா அல் ஹோசாணி,” வயதானவர்கள் மற்றும் நாள்பட்ட நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த பூஸ்டர் தடுப்பூசி வழங்க முன்னுரிமை அளிக்கப்படும்” என்றார்.

சர்வதேச ஆய்வுகளின் அடிப்படையில் கொரோனா தடுப்பூசியானது குறைந்தது ஆறுமாத காலத்திற்கு மக்களுக்கு பாதுகாப்பை வழங்குவது நிரூபணம் ஆகியுள்ளது. இதன்காரணமாகவே குறைவான நோய் எதிர்ப்பு சக்தி உடையவர்களுக்கும் நெடுநாள் நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் இந்தத் தடுப்பூசி அவசியமாகிறது. இதற்கு முன்னரே, அமீரகத்தில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மக்களுக்கு தடுப்பூசி இந்த பூஸ்டர் தடுப்பூசி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அமீரகத்தில் இதுவரை 16 வயதிற்கு மேற்பட்டவர்களில் 73.88 சதவித மக்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டிருப்பதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கொரோனா நோயால் பாதிக்கப்படக்கூடிய மக்களில் 80 சதவித மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது. அமீரக சுகாதாரம் மற்றும் நோய்தடுப்புத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இதுவரையில் இரண்டு டோஸ்களையும் சேர்த்து 11.59 மில்லியன் தடுப்பூசிகள் வழங்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VACCINE
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap