அமீரகத்தில் சினோபார்ம் CNBG’ நிறுவனத்தின் புதிய கொரோனா தடுப்பூசியை அவசர கால பயன்பாட்டிற்கு உபயோகிக்க அனுமதி வழங்கியுள்ளது அமீரக சுகாதார மற்றும் நோய்த்தடுப்பு அமைச்சகம்.
பல்வேறு கட்ட ஆய்வுகளின் அடிப்படையில் நம்பகத்தன்மை வாய்ந்த முடிவுகள் பெறப்பட்டதால் இந்த தடுப்பூசிக்கு அனுமதி அளிக்கப்பட்டிருப்பதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அத்துடன் இந்தப் புது தடுப்பூசி 100 சதவீத ஆண்டிபாடிகளை உருவாக்குவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். தன்னார்வலர்களுக்கு செலுத்தப்பட்ட இந்த தடுப்பூசி எவ்வித பக்க விளைவுகளையும் ஏற்படுத்தவில்லை என ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கொரோனாவிற்கு எதிரான நோய் தடுப்பு ஆற்றலை இந்தத் தடுப்பூசி அதிகரிக்கும் என அமைச்சகம் தெரிவித்துள்ளது. G42 மற்றும் சினோபார்ம் CNBG நிறுவனத்தின் நிதியுதவியில் இயங்கும் ஹயாத் பையோடெக் நிறுவனம் இந்தத் தடுப்பூசியை தயாரித்து விநியோகம் செய்துவருகிறது.
அமீரகத்தின் சட்ட விதிமுறைகளுக்குட்பட்டு தயாரிக்கப்பட்டுள்ள இந்த தடுப்பூசியை ஜனவரி 2022 முதல் பூஸ்டர் டோஸாக மக்களுக்குச் செலுத்த அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது.
