UAE Tamil Web

ஆப்கானிஸ்தானுக்கு விமானங்கள் பறக்க தடை – அமீரக விமான போக்குவரத்துத்துறை உத்தரவு!

ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றியுள்ளதால் அந்நாட்டில் ஆட்சிக்கவிழ்ப்பு அரங்கேறியுள்ளது. அதிபர் அஷ்ரப் கனி மற்றும் அதிகாரிகள் வெளிநாடுகளுக்கு தப்பியோடிவிட்ட நிலையில் அங்கிருந்து வெளியேற முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர். தலைநகர் காபூலில் உள்ள விமான நிலையத்தில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. விமானத்தை எடுப்பதற்கு விமானிகள் யாரும் முன்வராததால் பயணிகள் விரக்தியடைந்துள்ளனர். விமான ஓடுபாதை முழுவதும் மக்கள் திரண்டுள்ளதால் விமானத்தை தரையிறக்கவும் பறக்கச் செய்வதற்கும் பெரும் சவால் நீடிக்கிறது. ஆப்கனில் நிலவும் பதற்றமான சூழல் கருதி மறு உத்தரவு வரும் வரை அமீரகத்தில் உள்ள அனைத்து விமான நிலையங்களில் இருந்தும் ஆப்கானிஸ்தானுக்கான விமான போக்குவரத்தை தடை செய்வதாக அமீரக விமான போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது. அசாதாரண சூழல் தணிந்ததும் விமான போக்குவரத்து குறித்து மறு அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக எமிரேட்ஸ், Fly Dubai ஆகிய விமான நிறுவனங்கள் ஆப்கானிஸ்தானிற்கான விமான சேவையை ரத்து செய்வதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

0 Shares
Share via
Copy link