இன்றைய தகவல் தொழில்நுட்ப உலகில் நம்மால் நம்முடைய தேவைகளை விரல் நுனியால் நிறைவேற்றிக்கொள்ள முடிகிறது உண்மை என்றாலும் நம்மை நோக்கி விரிக்கப்படுகிற வலைகளில் நாம் எளிதில் சிக்கிவிடும் அபாயமும் இதில் இருக்கத்தான் செய்கிறது.
துபாயில் வெகு விமர்சையாக நடைபெற்றுவரும் துபாய் எக்ஸ்போ -வில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி போலியான இணையதளங்களை நடத்திவந்த குழு மீது சமீபத்தில் துபாய் காவல்துறையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுபோன்று பிரபலமான நிறுவனங்கள், நிகழ்ச்சிகளில் வேலைக்கு ஆள் எடுப்பதாகக் கூறி, மக்களிடம் இருந்து பணத்தைப் பெற்று ஏமாற்றும் நபர்களிடம் கவனமாக இருக்கும்படி துபாய் காவல்துறை மக்களை எச்சரித்துள்ளது.
இதுபோன்று விளம்பரங்களை பார்த்தால், அவர்கள் குறிப்பிட்டிருக்கும் நிறுவனங்களின் அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிட்டு, உண்மையாகவே அப்படி ஒரு வேலை இருக்கிறதா? அதற்கு ஆட்களைத் தேர்வு செய்கிறதா அந்நிறுவனம்? என்பதை தெரிந்துகொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதேபோல, இதுபோன்ற முன்பின் தெரியாத நபர்கள், வேலைக்காக எனக் கூறி புகைப்படங்களை அனுப்பக் கோரினால் அனுப்ப வேண்டாம் எனவும் இதனால் நீங்கள் மிரட்டலுக்கு ஆளாகலாம் எனவும் பெண்களை காவல்துறை எச்சரித்துள்ளது.