UAE Tamil Web

ஏழைகளுக்கு உணவு வழங்கும் திட்டத்திற்கு 10 லட்சம் திர்ஹம்ஸ் அளித்த லூலூ ஷாப்பிங் மால் உரிமையாளர் யூசப் அலி..!

Yousuf ali

அமீரக அரசு சமீபத்தில் துவங்கியுள்ள 100 Million Meals என்னும் திட்டத்திற்காக 10 லட்சம் திர்ஹம்ஸ் வழங்கியிருக்கிறார் லூலூ குழும உரிமையாளர் யூசப் அலி.

“கொரோனாவால் பாதிப்படைந்த குடும்பங்கள் மற்றும் சமூக மக்களுக்கு ரமலான் மாதத்தில் உதவும் வகையில் 100 Million Meals திட்டம் துவங்கப்பட்டுள்ளது. சமூக சார்ந்த குழுமம் நாங்கள். இது நாங்கள் சமூகம் மக்களுக்கு திருப்பியளிக்கவேண்டிய காலம். அரசின் இந்த நல்ல நோக்கத்தில் எங்களுடைய பங்களிப்பும் இருக்கவேண்டும் என நாங்கள் உறுதி எடுத்துள்ளோம்” என யூசப் அலி தெரிவித்தார்.

நீங்கள் அளிக்கும் ஒவ்வொரு திர்ஹம்ஸ் பணமும் 20 நாடுகளில் உள்ள கஷ்டப்படும் மக்களின் உணவுத் தேவைக்காக பயன்படுத்தப்படும். கொரோனாவால் பாதிக்கப்பட்ட தனி நபர்கள் மற்றும் குடும்பங்களுக்கு உதவும் வகையில் கடந்தாண்டு துவங்கப்பட்ட 10 Million Meals திட்டத்திற்கு லூலூ குழுமம் 10 லட்சம் திர்ஹம்ஸ் நிதியுதவி அளித்தது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம் 125,000 பேருக்கு உணவு வழங்கப்பட்டிருக்கிறது.

இதுமட்டுமல்லாமல் மக்தி யாக்கோப் குளோபல் இதய மையத்தின் கட்டுமானப் பணிகளுக்கு யூசப் அலி 3 மில்லியன் திர்ஹம்ஸ் நிதியுதவி அளித்திருக்கிறார். இவருடைய மனிதாபிமான செயல்பாடுகளுக்காக ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் உலகளாவிய திட்டங்களின் ஒரு பகுதியான Arab Hope Makers 2020 நிகழ்வில் இவருடைய பெயரும் தேர்ந்தெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது..