மத்திய கிழக்கு நாடுகள் என்றாலே பொதுவாக நமக்குள் பெட்ரோல், டீசல் தான் நினைவிற்கு வரும். ஆனால், அவற்றை உபயோகிப்பதால் கார்பன் உமிழ்வு அதிகமாகி புவி வெப்பமயமாதல், கால நிலை மாற்றம் ஆகியவற்றிற்கு காரணமாக அமைகின்றன. இதன்காரணமாகவே அல் பராக்கா அணுமின்நிலைய திட்டத்தை கையில் எடுத்தது அமீரக அரசு.
முழுவதும் அமீரக ஆராய்ச்சியாளர்களால் உருவாக்கப்பட்ட இந்த அணுமின்நிலையம் வணிக ரீதியிலான ஆற்றல் உற்பத்தியை கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி துவங்கியது. இதனை கவுரவிக்கும் வகையில் அமீரக மத்திய வங்கி 50 வெள்ளி நாணயங்களை அச்சிட இருக்கிறது.
ஒவ்வொரு காசும் 40 கிராம் எடை கொண்டதாக இருக்கும் என மத்திய வங்கி தெரிவித்துள்ளது. மேலும், மத்திய வங்கி மற்றும் அதன் கிளைகளில் இக்காசுகள் விற்பனைக்கு வராது எனவும் மாறாக அமீரக அணுசக்தி கார்ப்பரேஷன் (ENEC), பராக்கா அணுமின் நிலையத்தின் தலைவர் மற்றும் மேம்பாட்டாளர் ஆகியோரிடம் இந்தக் காசுகள் வழங்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நினைவு நாணயத்தின் ஒருபுறத்தில் பராக்கா யூனிட் 1 என்பது ஆங்கிலத்திலும் அரபியிலும் பொறிக்கப்பட்டுள்ளது. நாணயத்தின் அடுத்த பக்கத்தில் அமீரக மத்திய வங்கியின் பெயர் மற்றும் அமீரக அரசின் அதிகாரப்பூர்வ இலைச்சினை ஆகியவை இடம்பெற்றுள்ளன.
