சவூதி அரேபியாவின் கமிஸ் முஷைத் பகுதியில் பொதுமக்கள் மற்றும் பொது இடங்களைக் குறிவைத்து ட்ரோன் கொண்டு தாக்குதல் நடத்த ஈரானின் பின்புலத்தில் இயங்கும் ஹௌதி தீவிரவாத இயக்கம் முயற்சித்திருக்கிறது. இருப்பினும் ராணுவப்படை வெற்றிகரமாக டிரோனை சுட்டு வீழ்த்தியிருக்கிறது.
இதற்கு அமீரக வெளியுறவு மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு அமைச்சகம் கடும் கண்டனத்தைப் பதிவு செய்திருக்கிறது. ஹௌதியின் இந்த தொடர் தாக்குதல்கள், சர்வதேச சட்ட திட்டங்கள் மற்றும் விதிமுறைகளுக்கு விடுக்கப்பட்ட சவால் எனவும் சவூதியின் நிலத்தின்மீதும் மக்களின் மீதும் நடத்தப்படுகிற இந்த தாக்குதலில் அமீரக அரசு எப்போதும் சவூதி அரசிற்கு உறுதுணையாக நிற்கும் எனவும் அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிராந்தியத்தின் அமைதியையும் நிலைத்தன்மையையும் சீர்குலைக்கும் நோக்கத்தோடு நிகழ்த்தப்படுகிற இந்த தொடர் தாக்குதலுக்கு எதிராக ஒன்றிணைய உலக நாடுகளை அமீரகம் அழைப்பதாக அறிக்கையில் சுட்டப்பட்டுள்ளது.
“அமீரகம் மற்றும் சவூதி அரேபியாவின் பாதுகாப்பு பிரிக்க முடியாதது, மேலும் சவூதி எதிர்கொள்ளும் எந்தவொரு அச்சுறுத்தலையும் அமீரகம் தனது பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மைக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தலாக கருதுகிறது” என அமைச்சகம் தெரிவித்துள்ளது.
