UAE Tamil Web

பிரான்ஸைத் தொடர்ந்து சவூதியிலும் தீவிரவாதத் தாக்குதல் – அமீரகம் கடும் கண்டனம்..!

UAE_Flag_resources

பிரான்ஸின் நீஸ் நகரத்தில் உள்ள தேவாலயம் ஒன்றில் நிகழ்த்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதலுக்கு அமீரகம் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது.

- Advertisment -

3 பேர் மரணம்

தேவாலயத்தில் குழுமியிருந்தவர்களில் இரண்டு பெண்கள் மற்றும் ஒரு ஆணை, தீவிரவாதி ஒருவன் கத்தியால் குத்தி கொலை செய்திருக்கிறான். உலகம் முழுவதிலும் இருந்து இச்செயலுக்கு எதிராக கண்டனங்கள் குவிந்துவருகின்றன. இதனையடுத்து பிரான்ஸின் பொது இடங்களில் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

 கண்டனம் தெரிவித்த அமீரகம்

பிரான்சில் நடத்தப்பட்ட இந்த தீவிரவாதத் தாக்குதலுக்கு அமீரகம் தனது கடும் கண்டனத்தைப் பதிவு செய்திருக்கிறது. வெளியுறவுத்துறை மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இம்மாதிரியான தீவிரவாதத் தாக்குதலுக்கு அமீரகம் கடும் கண்டனத்தைத் தெரிவிப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

“பாதுகாப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் நடத்தப்படும் இந்த தாக்குதல்கள் ஒடுக்கப்படவேண்டும். மத மற்றும் மனிதாபிமான மதிப்புகளுக்கு இந்த தாக்குதல் எதிரானது” எனவும் அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த விபத்தினால் மரணமடைந்த நபர்களின் குடும்பங்களுக்கு தங்களது இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதாகவும், தாக்குதலினால் காயமடைந்தவர்கள் விரைந்து நலம்பெற வாழ்த்துவதாகவும் அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.

சவூதியிலும் தாக்குதல்

நேற்று ஜித்தாவில் உள்ள சவூதி அரேபியாவிற்கான பிரான்ஸின் துணைத் தூதரகத்தில் சவூதி நபர் ஒருவர் அங்கிருந்த காவலாளியை கத்தி கொண்டு தாக்கியிருக்கிறார்.

தாக்குதல் நடத்தியவனை சவூதி பாதுகாப்புப் படையினர் விரைந்து கைது செய்தனர். காயமடைந்த காவலாளி உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டு அங்கே அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதிர்ஷடவசமாக காவலாளியின் உயிருக்கு எவ்வித ஆபத்தும் ஏற்படவில்லை.

அமீரகம் இத்தகைய காழ்ப்புணர்ச்சியைக் கண்டிக்கிறது. ஜெட்டாவில் நடத்தப்பட்ட தாக்குதலில் காயமடைந்த காவலாளி பூரண நலம்பெற வாழ்த்துவதாக அமீரக வெளியுறவுத்துறை மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.