UAE Tamil Web

முழுவதும் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்ட பணியாளர்களுடன் இயக்கப்பட்ட எமிரேட்ஸ் விமானம்..!

Emirates Airline

இன்று துபாயில் இருந்து லாஸ் ஏஞ்செல்ஸ் நகருக்கு இயக்கப்பட்ட EK215 எமிரேட்ஸ் விமானத்தில் பயணித்த அனைத்து பணியாளர்களும் கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் பெற்றுக்கொண்டவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செக் – இன், செக்யூரிட்டி, பிசினஸ் மற்றும் ஃபர்ஸ்ட் கிளாஸ் லவுஞ், போர்டிங் கேட் பணியாளர்கள், பொறியாளர்கள், விமானிகள் மற்றும் கேபின் குழு ஆகிய அனைவரும் கொரோனா தடுப்பூசியைப் பெற்றிருக்கிறார்கள்.

dnata மற்றும் ஸ்கை கார்கோ குழுக்களைச் சேர்ந்த கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்ட பணியாளர்கள் மட்டுமே இந்தப் பயணத்தில் கலந்துகொண்டுள்ளனர்.

கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு எமிரேட்ஸ் குழுமம் கொரோனா தடுப்பூசித் திட்டத்தைத் துவங்கியது. இதுவரையில் 26,000 அமீரக முன்கள விமானப் பணியாளர்களுக்கு (44 சதவீத ஊழியர்கள்) பைசர் – பையோ என்டெக் அல்லது சினோபார்ம் தடுப்பூசியானது வழங்கப்பட்டிருக்கிறது.

எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல்பாட்டு அலுவலர் அதெல் அல் ரெதா (Adel Al Redha) இதுகுறித்துப் பேசுகையில்,” உலகளாவிய அளவில் பொதுமக்கள் மற்றும் சரக்கு போக்குவரத்திற்காக எங்களுடைய ஊழியர்கள் உழைத்து வருகின்றனர். ஆகவே, எங்களுடன் பயணிக்கும் மக்கள் மற்றும் சமூகத்தின் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் எங்களுடைய ஊழியர்கள் கொரோனா தடுப்பூசியைப் பெற்றிருக்கின்றனர்” என்றார்.

“எங்களுடைய சக ஊழியர்களிடம் கொரோனா தடுப்பூசியைப் பெற்றுகொள்வது குறித்து நேர்மறையான எண்ணம் நிலவுவதை நாங்கள் அறிவோம்” என ரெதா தெரிவித்தார்.

இந்த நிறுவனத்தினைச் சேர்ந்த கேபின் மற்றும் விமான கட்டுப்பாட்டு குழுவினரில் 5000 பேருக்கு கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், எதிர்வரும் காலங்களில் இந்நிறுவன பணியாளர்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசியானது வழங்கப்பட இருப்பதாகவும் இதன்மூலம் பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான பயண சூழலை உருவாக்கிட முடியும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். போலவே, கொரோனா காரணமாக நிலவிவரும் எல்லை தாண்டுதலில் உள்ள சிக்கல்கள் இதன் காரணமாக தளர்த்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

கொரோனா தடுப்பூசி வழங்குவதில் உலகளவில் அமீரகம் முதலிடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது. அதாவது 100 பேருக்கு 55.27 டோஸ்கள் என்ற வீதத்தில் தடுப்பூசியானது வழங்கப்பட்டு வருகிறது.