UAE Tamil Web

முக்கியச் செய்தி: அமீரகத்தில் இனி ஒவ்வொரு வருடமும் மக்கள் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொள்ளவேண்டிய நிலை வரலாம் – அரசு அதிகாரிகள் தகவல்..!

UAE-vaccination

அமீரக மக்கள் இனி ஒவ்வொரு வருடமும் கொரோனா தடுப்பூசிகளை போட்டுக்கொள்ள வேண்டிய நிலை வரலாம் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அபுதாபி பொது சுகாதார மையம் வெளியிட்ட வீடியோவில் இதுகுறித்துப் பேசிய அமீரக சுகாதாரத்துறையின் செய்தித் தொடர்பாளர் டாக்டர். ஃபரிதா அல் ஹோசானி,” பருவகால காய்ச்சலுக்கு தடுப்பூசி எடுத்துக்கொள்வதைப் போல வருடாவருடம் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொள்ளவேண்டிய நிலை வரலாம். இது குறித்து ஆய்வுகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. அமீரகத்தில் கடந்த வருடம் முதல் கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டுவருகிறது. தடுப்பூசியால் உயரும் நோய் எதிர்ப்பு சக்தியின் துல்லியத்தன்மை குறித்த தகவல்களைப் பெற இன்னும் காலமாகும். ஏனெனில் ஒவ்வொரு நபருக்கும் வெவ்வேறு வகையில் நோய் எதிர்ப்பு சக்தி இருக்கிறது இதன் காரணமாக தடுப்பூசியின் திறனும் நபருக்கு நபர் மாறுபடும்” என்றார்.

அமீரகத்தில் சினோபார்ம் தடுப்பூசியின் இரண்டு டோஸ்களைப் பெற்றவர்கள் ஆறுமாத கால இடைவெளியில் அதன் பூஸ்டர் தடுப்பூசியினை எடுத்துக்கொள்ள அனுமதிக்கப்படுவார்கள் என அமீரக அரசு சமீபத்தில் தெரிவித்திருந்தது. மக்களின் நோய் எதிர்ப்பு சக்தியை தொடர்ந்து மேம்படுத்தவும் கொரோனா தாக்குதலில் இருந்து சமூக மக்களைக் காக்கவும் இந்த முடிவினை அரசு எடுத்தது.

தற்போது ஹோசானி வெளியிட்டிருக்கும் அறிவிப்பும் அதன் நீட்சியே. அதாவது குறிப்பிட்ட சீரான இடைவெளியில் மக்களுக்கு தடுப்பூசி வழங்குவதன் மூலமாக கொரோனாவுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தியை மக்கள் பெறுவார்கள். இதனை மையமாகக்கொண்டே அமீரக அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.