UAE Tamil Web

முதல் கட்ட தடுப்பூசி போட்ட பின்னரும் கொரோனா நோய் தொற்று ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்..?

vaccine

கொரோனாவிற்கு எதிராக அமீரகம் போராடிவரும் இவ்வேளையில் முதற்கட்ட கொரோனா தடுப்பூசி போட்ட பிறகும் ஒருவருக்கு கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டால் அவர் முழுமையாக குணமடைந்த பிறகே இரண்டாம் கட்ட தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று அமீரகத்தின் சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் செவ்வாயன்று தெரிவித்துள்ளது.

- Advertisment -

முதல் தடுப்பூசி போட்ட பிறகும் ஒருவர் நோய்தொற்றுக்கு உள்ளாகி அவருக்கு அறிகுறி இல்லாமலோ அல்லது குறைந்த அறிகுறிகள் தென்பட்டாலோ அவர் முழுமையாக குணமடைந்த பிறகு இரண்டாம் கட்ட தடுப்பூசி போட்டுக்கொள்ள அறிவுறுத்துகிறோம் என்று அமீரகத்தின் சுகாதாரத் துறையின் அதிகாரப்பூர்வ செய்தி தொடர்பாளர் டாக்டர் ஃபரிதா அல் ஹொசானி தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றுடைய ஒருவற்கு மிதமான அறிகுறிகள் அல்லது கடுமையான அறிகுறிகள் அல்லது மருத்துவமனையில் அனுமதிக்கப் பட வேண்டிய நிலையில் இருந்தால் அந்த நோயாளி கண்டிப்பாக மருத்துவமனையை அணுக அறிவுறுத்தப்படுகின்றனர்.

அதுமட்டுமின்றி நோயாளிகளின் நோய் எதிர்ப்பு சக்தியை பரிசோதனை செய்த பின்னரே நோயாளிக்கு இரண்டாம் கட்ட தடுப்பு மருந்து தேவையா இல்லையா என்பதை மருத்துவர் தெரிவிப்பார் என்று ஃபரிதா அல் ஹொசானி கூறினார்.

மேலும் அவர் கூறுகையில், பெரும்பாலானோருக்கு முதற்கட்ட தடுப்பூசி போட்ட பின்னரும் சமூகத்திற்குள் பரவி இருக்கும் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுகின்றனர் என்று தெரிவித்தார்.

முதல் தடுப்பூசி போட்ட பின்னர் அவர்களின் உடலுக்கு தேவையான முழு நோய் எதிர்ப்பு சக்தி உருவாகும் முன்னரே கொரோனா தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. ஏனெனில் இரண்டாவது கட்ட தடுப்பூசி போட்டு குறைந்தது இரண்டு வாரங்கள் ஆன பின்னர் தான் உடலுக்கு தேவையான முழு நோய் எதிர்ப்பு சக்தியும் உருவாகும்.

தேசிய தடுப்பூசி திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து இதுவரை ஐக்கிய அரபு அமீரகத்தின் மொத்த மக்கள் தொகையில் 40 சதவீதத்திற்கும் அதிகமானோர் கொரோனா தடுப்பூசியை பயன்படுத்தியுள்ளனர். அதிலும் முதியோர்களுக்கான மொத்த மக்கள் தொகையில் 40.6 சதவீதத்திற்கு அதிகமானோர் கொரோனா வைரஸிக்கு எதிராக தடுப்பூசிகள் போட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கடந்த பிப்ரவரி 16 வரை 5.19 மில்லியனுக்கும் அதிகமான தடுப்பூசி மருந்துகள் அமீரக சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகத்தால் வழங்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி அமீரகத்தில் தடுப்பூசி போடப்படும் விகிதமானது 100 பேருக்கு 52.56 ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த கொரோனா தொற்றுநோயை எதிர்கொள்வதற்கான சிறந்த வழி தடுப்பூசி போட்டுக் கொள்வதே ஆகும் என்று ஃபரிதா அல் ஹொசானி தெரிவித்தார். ஏனென்றால் தடுப்பூசி போடப்படும் விகிதம் அதிகமாகும் பொழுது நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கிறது. இது ஒட்டு மொத்த சமூகமும் இந்நோயிலிருந்து முழுமையாக விடுபட வழி வகுக்கும் என்று கூறினார்.

எல்லா குடியிருப்பாளர்களும் இரண்டாம் கட்ட தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள அமைச்சகம் வலியுறுத்துகிறது இதன் மூலம் நோய்களை தடுப்பதற்கான கூடுதல் பாதுகாப்பை உறுதி செய்துகொள்ள முடியும் என்று தெரிவித்ததோடு இரண்டு கட்ட கொரோனா தடுப்பூசிகளும் எடுத்த பின்னரும் வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தொடர்ந்து கடைபிடிக்குமாறு அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.