UAE Tamil Web

பத்திரமா இரு.. குழந்தைங்கள நல்லா பாத்துக்கோ.. நான் போறேன் – மனைவி கண்முன்னே மேம்பாலத்திலிருந்து கீழே விழுந்து உயிரிழந்த கணவன் – கலங்கவைக்கும் காரணம்..!

Stock-Ajman-skyline-taxi-bus-street_

அஜ்மானில் மனைவியின் கண்முன்னே மேம்பாலத்தில் இருந்து கீழே விழுந்து கணவர் உயிரிழந்தது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அஜ்மானில் உள்ள அல் ரவ்தா மேம்பாலத்தில் தனது மனைவியுடன் காரில் சென்றுகொண்டிருந்தவர் திடீரென காரை நிறுத்திவிட்டு, அதிலிருந்து கீழே இறங்கியிருக்கிறார்.

மனைவியிடம் கவனமாக இரு, குழந்தைகளைப் பார்த்துக்கொள் எனச் சொல்லியபடி மேம்பாலத்தில் இருந்து கீழே குதித்திருக்கிறார் அவர். அங்கிருந்த மக்கள் உடனடியாக அல் ஹமிதியா காவல்நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர்.

இருப்பினும் கீழே விழுந்த சில நிமிடங்களில் அவர் உயிரிழந்திருக்கிறார். அவருடைய உடல் தேசிய ஆம்புலன்ஸ் மூலமாக மருத்துவமனையின் பிணவறைக்கு எடுத்துச் செல்லப்பட்டிருக்கிறது.

கொரோனா.. வேலைபயம்…

இதுகுறித்துப் பேசிய உயிரிழந்தவரின் மனைவி,”எனது கணவருக்கு கொரோனா பாசிட்டிவ். இதனால் அவர் மிகுந்த மன உளைச்சலில் இருந்தார்.  குவாரண்டைன் இருப்பவர்களுக்கான கைப்பட்டையை அவர் அணிந்திருந்தார். தன்னுடைய நோய்த்தாக்குதலால் ஒருவேளை வேலை போய்விடுமோ என அவர் அஞ்சினார். மேம்பாலத்தில் சென்றுகொண்டிருந்தபோது காரை நிறுத்திவிட்டு இறங்கியவர், கவனமாக இரு, குழந்தைகளை பார்த்துக்கொள் எனச் சொன்னவர் மேம்பாலத்திலிருந்து கீழே குதித்தார்” என்றார்.

இதுகுறித்துப் பேசிய அல் ஹமிதியா காவல்நிலையத்தின் இயக்குனர் லெப்டினன்ட் கர்னல் யாஹ்யா கலாஃப் அல் மட்ரோஷி,” அல் ரவ்தா மேம்பாலத்தில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்த 42 வயது நபர் குறித்து நேற்று காலை எங்களுக்குத் தகவல் கிடைத்தது. அங்கிருந்த மக்கள் இதுகுறித்து எங்களுக்குத் தகவல் அளித்தனர். இறந்தவரின் உடல் பிணவறைக்கு எடுத்துச் செல்லப்பட்டிருக்கிறது” என்றார்.