UAE Tamil Web

அமீரகத்தில் இனி சனி, ஞாயிறு வார விடுமுறை..? – அரசு வெளியிட்டுள்ள அறிக்கை..!

Dubai

அமீரகத்தில் தற்போது வழக்கத்திலிருக்கும் வார இறுதி விடுமுறை நாட்களான வெள்ளி மற்றும் சனிக்கிழமைக்குப் பதிலாக சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளை விடுமுறை தினமாக மாற்ற அரசு யோசித்துவருவதாக சமூக வலைத்தளங்களில் ஒரு செய்தி பரப்பப்பட்டுவருகிறது.

எமிரேட்ஸ் நியூஸ் ஏஜென்சி (WAM) இந்தச் செய்தியை வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் WAM நிறுவனம் இந்தச் செய்தியை முற்றிலுமாக மறுத்துள்ளது.

“அதிகாரப்பூர்வ வார விடுமுறையை மாற்றம் செய்வது குறித்து அரசு திட்டமிட்டு வருவதாக சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் செய்தி போலியானது. WAM அப்படியான செய்தியை வெளியிடவில்லை. இது தவறான தகவலாகும். மக்களை திசைதிருப்பும் வேலை இது” என WAM நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் முகமது ஜலால் அல் ரைசி தெரிவித்துள்ளார்.

கடந்த 2006 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அமீரகத்தின் அதிகாரப்பூர்வ வார விடுமுறை தினம் மாற்றப்பட்டது. அதுவரையில் வியாழன் – வெள்ளிக்கிழமைகள் வார விடுமுறைகளாக இருந்தன. பின்னர், மேற்கத்திய நாடுகளுடன் இணைந்து பணிபுரியும் நிறுவனங்களுக்கு உதவும் வகையில் வெள்ளி – சனிக்கிழமைகள் வார விடுமுறையாக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

போலியான தகவல்கள் மற்றும் வதந்திகளைப் பரப்பவேண்டாம் எனவும் அவை அமீரக சட்டப்படி குற்றம் எனவும் அமீரக அதிகாரிகள் பொதுமக்களை எச்சரித்துவருகின்றனர்.

“பொய்யான செய்திகள், போலி தகவல்கள் அல்லது வதந்திகளை வேண்டுமென்றே பரப்புபவர் அல்லது பொதுப் பாதுகாப்பைத் தொந்தரவு செய்யும் அல்லது மக்கள் மத்தியில் தூண்டுதலை ஏற்படுத்தும் அல்லது பொது நலனுக்கு தீங்கு விளைவிக்கும் ஆத்திரமூட்டும் பிரச்சாரங்களை பரப்புபவருக்கு, பெடரல் தண்டனைச் சட்டத்தின் 198 வது பிரிவின்படி ஒரு வருடத்திற்கும் அதிகமான காலத்திற்கு சிறைத்தண்டனை விதிக்கப்படும்” என அமீரக பொதுவழக்குத்துறை எச்சரித்துள்ளது.