39.8 C
Dubai
July 14, 2020
UAE Tamil Web

லேசர் தொழில்நுட்பத்தின் மூலம் அதிவேக கொரோனா பரிசோதனைக்குத் தயாராகும் அமீரகம்!

CORONA TESTING

இண்டர்நேஷனல் ஹோல்டிங் கம்பெனி (International Holdings Company) யின் முதலீட்டில் இயங்கிவரும் குவான்ட்லேஸ் இமேஜிங் லேப் (QuantLase Imaging Lab) என்னும் ஆராய்ச்சியகம், அதிவேக கொரோனா பரிசோதனை கருவியைக் கண்டுபிடித்துள்ளது. இதன் மூலமாக ஒரே நேரத்தில் அதிக எண்ணிக்கையிலான பரிசோதனைகளை செய்ய முடிவதுடன், வினாடிகளில் அதற்கான முடிவுகளையும் பெற முடியும்.

இந்த தொழில்நுட்பம் மூலம் ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புத் துறையின் மையமாக அமீரகம் விளங்கும். கொரோனா நோய்த் தொற்று இருப்பதாக சந்தேகிக்கும் நபர்களுக்கான அதிவேக பரிசோதனையை மேற்கொள்வது உலகமெங்கிலும் உள்ள ஆராய்ச்சியாளர்களுக்கு சவாலாகவே இருந்து வருகிறது. இதன்மூலம் நோய்த்தொற்று தீவிரமடையாமல் தடுக்க முடியும். இந்தப் புதிய பரிசோதனைக் கருவி மூலமாக அதிக எண்ணிக்கையிலான பரிசோதனைகளை குறைவான கால அளவில்  மேற்கொள்ளலாம்.

இதுகுறித்து சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்புத் துறையின் அமைச்சரான அப்துல் ரஹ்மான் பின் முகமது பின் நாசர் அல் ஓவைஸ் (Abdul Rahman bin Mohammad bin Nasser Al Owais) பேசுகையில்,” கொரோனோ பரிசோதனையை துரிதமாக மேற்கொள்ளும் முயற்சிகள் குறித்த சாத்தியங்களை நாங்கள் கண்காணித்து வருகிறோம். அமீரகத்தின் சுகாதார கட்டமைப்பிற்கு உதவும் கண்டுபிடிப்புகளை நாங்கள் ஆதரிக்கிறோம். குவான்ட்லேஸ் நிறுவனத்தின் புதிய பரிசோதனை முயற்சிகளை சுகாதாரத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்துவந்தார்கள். மக்களைக் காக்கும் இந்தப் புதிய தொழில்நுட்பத்தினைக் கண்டுபிடித்ததில் பெருமை கொள்கிறோம்” எனத் தெரிவித்தார்.

corona recover
Image Credits- Khaleej Times | picture used for illustrative purposes only

கொரோனோ பாதிப்புக்குள்ளானவரின் இரத்த மாதிரிகளில் செல் அமைப்பு மாற்றமடைகிறது. இதுகுறித்த ஆராய்ச்சியில் ஈடுபடும் குவான்ட்லேஸ் நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்களை வழிநடத்தும் டாக்டர் பிரமோத் குமார் பேசுகையில்,” இந்த பரிசோதனைக் கருவியில் CMOS detector மூலமாக அதிவேகமான முறையில் பரிசோதனை மேற்கொள்ளலாம். அதிகளவிலான பரிசோதனைகளை மேற்கொள்ள முடிவதுடன், பரிசோதனை முடிவுகளை சில வினாடிகளில் பெறலாம்” என்றார்.

லேசர் சார்ந்த DPI (Diffractive Phase Interferometry)  எனப்படும் இந்த பரிசோதனை, optical-phase modulation என்னும் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் செய்யப்படுகிறது. இதன் மூலமாக நோய்த் தொற்று இருக்கிறதா? என்பதனை வினாடிகளில் கண்டுபிடிக்கலாம். இந்த பரிசோதனைக் கருவி பயன்படுத்த எளிமையாகவும், அதிக இடம் தேவைப்படாததாகவும், விலை மலிவாகவும் உள்ளது.

மருத்துவமனை மட்டுமல்லாமல் பொது இடங்களான வணிக வளாகங்கள் மற்றும் திரையரங்கங்கள் ஆகியவற்றிலும் இந்தக் கருவியினை எளிதாக நிறுவலாம். போதுமான பயிற்சியுடன் வீட்டிலேயே பரிசோதனை மற்றும் கண்காணிப்பை இந்த கருவியின் மூலமாக மேற்கொள்ள முடியும். கொரோனோ நோய்த் தொற்றைக் கண்டறிவதில் இந்த கருவியின் கண்டுபிடிப்பு மிகப்பெரிய திருப்புமுனையாகும்.

virus_
Image Credit :WebMD

கொரோனா பரிசோதனை முயற்சியில் செயற்கை நுண்ணறிவின் (artificial intelligence) பங்கு குறித்துப் பேசிய டாக்டர் குமார்,” செயற்கை நுண்ணறிவின் படப் பகுப்பாய்வின் (image-analysis) மூலமாகக் கிடைக்கும் படங்கள் துல்லியத்துடனும், வேகமாகவும், சரியான அளவிலும் கிடைக்கின்றன. ஆனால் அதிக எண்ணிக்கையில் நடத்தப்பட்டும் பரிசோதனையின் போது அதே அளவு துல்லியத்தினை எதிர்பார்ப்பது கடினம். எங்களுடைய ஆய்வகம் பிரபல செயற்கை நுண்ணறிவு மற்றும் கிளவுட் கம்ப்யூடிங் கம்பெனியான (Cloud Computing company) G42 உடன் இணைந்து இந்த திட்டத்தின் அடுத்தகட்ட ஆராய்ச்சிகளை மேற்கொள்ள இருக்கிறது” என்றார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்த இண்டர்நேஷனல் ஹோல்டிங் கம்பெனியின் இயக்குனர்களில் ஒருவரான நாதிர் அகமது அல் ஹம்மாடி (Nader Ahmed Al Hammadi) ,” அமீரக அரசின் தலைமையில் மேற்கொள்ளப்பட்டுவரும் கொரோனா பரிசோதனை மற்றும் விழிப்புணர்வில்  இண்டர்நேஷனல் ஹோல்டிங் கம்பெனியும் இணைந்துள்ளது பெருமையளிக்கிறது” என்றார்.

முதல் 1000 பரிசோதனைகளில் கிடைத்த அனுபவங்களின் அடிப்படையில் அடுத்தகட்ட சோதனைகளை அணுகினோம். இந்தப் பரிசோதனைகள் பல்வேறு படிநிலைகளைக் கொண்டது. தற்போதைய பரிசோதனை விதிமுறைகளின் அடிப்படையில் இப்போது அதிக எண்ணிக்கையிலான பரிசோதனைகளை மேற்கொண்டுவருவதாக மருத்துவர் குமார் தெரிவித்தார்.

Corona positive
Image Credit: The Economic Times

உலக சுகாதார நிறுவனம் கொரோனாவை உலக பெருநோயாக மார்ச் மாதம் அறிவித்ததிலிருந்து ஆராய்ச்சியாளர்கள் குறுகிய காலத்தில் நோய்த் தொற்றினைக் கண்டறிய முயற்சி செய்து வருகின்றனர். மேலும், மக்களுக்கு மருத்துவ உதவிகள் தேவைப்படும்போது அதனை வழங்க போதுமான மருத்துவர்கள் இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது. ஆனால், கொரோனா பரிசோதனைக்கு அதிக காலம் ஏற்படுவதை தடுக்க முடியவில்லை.

இன்னும் சில மாதங்களில் இந்த பரிசோதனைக் கருவி மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என டாக்டர் குமார் தெரிவித்தார். மேலும், “இந்தக் கருவியின் மூலமாக பெறப்படும் முடிவுகள் துல்லியத்துடன் இருக்கும். நோய்த்தொற்று ஏற்பட்ட உடனேயே இரத்த மாதிரிகளை பரிசோதனைக்கு உட்படுத்தப்படுத்தி  அதனைக் கண்டுபிடிக்க இந்தக் கருவியால் முடியும். எங்களுடைய இலக்கு முடிவுகளின் துல்லியத்தை அதிகப்படுத்துவதேயாகும்” என்றார்.

கடந்த 2018 பிப்ரவரியில், நாட்டின் தூணாக இருக்கும் மக்கள் நலன் குறித்த ஆய்வுகள் மற்றும் கண்டுபிடிப்புகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என அமீரக அரசு அறிவித்திருந்தது. இந்தப் புதிய திட்டத்தையும் சர்வதேச கல்வியகங்கள், கண்டுபிடிப்புத் துறையில் சிறந்து விளங்கும் நிறுவனங்கள் ஆகியவற்றுடன் இணைந்து செயலாற்ற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இதையும் படிங்க.!