UAE Tamil Web

மருத்துவரின் தவறுதலான சிகிச்சையால் தாயின் வயிற்றிலேயே இறந்த குழந்தை..!

doctor

தென்னாபிரிக்காவைச் சேர்ந்த 31 வயது பெண்ணிற்கு தவறுதலான சிகிச்சை அளித்ததன் விளைவாக கருக்கலைப்பு ஏற்டக் காரணமாக இருந்த மருத்துவர் மீதான வழக்கு இன்று துபாய் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

கடந்த 2016 ஆம் ஆண்டு நெஞ்செரிச்சல், மார்பு வலி, முகம் மற்றும் உடல்களில் வீக்கம் ஏற்படவே மருத்துவரைச் சந்தித்திருக்கிறார் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிப்பெண். ஈராக்கைச் சேர்ந்த பெண் மருத்துவர், கர்ப்பிணியை சரியான முறையில் பரிசோதிக்காமல் பாரசிட்டமால் மாத்திரைகளை மட்டும் கொடுத்து வீட்டிற்குச் செல்லலாம் எனத் தெரிவித்திருக்கிறார்.

டாக்டரின் அறிவுரையின்படி அந்தப்பெண்ணும் வீட்டிற்குச் செல்ல, அவரது உடல்நிலை மோசமாகியிருக்கிறது. இதனையடுத்து அந்தப் பெண்ணின் வீட்டில் பணிபுரிந்த பெண் ஆம்புலன்சிற்கு போன் செய்திருக்கிறார். மருத்துவமனையில் அளிக்கப்பட்ட அவர் சிகிச்சையின் பலனாக பிழைத்துக்கொண்டாலும் அவரது குழந்தை வயிற்றிலேயே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதனால் நொறுங்கிப்போன தாய், பெண் டாக்டர் மீது வழக்குத் தொடுத்திருக்கிறார். துபாய் சுகாதாரத்துறை அளித்த நிபுணர்களின் அறிக்கையின்படி பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு எக்லாம்ப்சியா மற்றும் ப்ளேசெண்டல் அப்ரப்ஷன் (eclampsia and placental abruption) என்னும் கோளாறு ஏற்பட்டது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

கர்ப்பப்பை உள்ளே ஏற்பட்ட இந்தக் கோளாறு காரணமாக பெண்ணிற்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டிருக்கிறது. இதனை கவனிக்காமல் மாத்திரைகளை மட்டும் மருத்துவர் கொடுத்ததால் குழந்தை இறந்துள்ளது என்பதை நிபுணர்கள் விளக்கியுள்ளனர்.

துபாய் நீதிமன்றத்தின் முதல்நிகழ்வு பெண் மருத்துவரை குற்றவாளியாக அறிவித்தது மட்டுமல்லாமல் 50,000 திர்ஹம்ஸ் பணத்தை குழந்தை இறப்பிற்கான இழப்பீடாக பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு வழங்க உத்தரவிட்டது. இதனையடுத்து இந்த வழக்கு மேல்முறையீடு செய்யப்பட்டதில் கூடுதலாக 20,000 திர்ஹம்ஸ் தொகையை மருத்துவர் அளிக்க உத்தரவிட்டிருக்கிறது மேல்முறையீட்டு நீதிமன்றம்.

இருப்பினும், தனக்கு ஏற்பட்ட மன அழுத்த மற்றும் தனிப்பட்ட இழப்புக்காக சிவில் வழக்கு ஒன்றினையும் மருத்துவர் மீது தொடுத்திருக்கிறார் பாதிக்கப்பட்ட பெண்.

doctor
0 Shares
Share via
Copy link