UAE Tamil Web

போதை பழக்கத்திலிருந்து மீண்டவர்களுக்கு வேலை கிடைக்கும் வரை மாதந்தோறும் நிதியுதவி.! அமீரக போலீஸார் திட்டம்..

drug

போதை பழக்கங்களுக்கு அடிமையாகி அதிலிருந்து மீட்கப்பட்டவர்களுக்கு வேலை கிடைக்கும் வரை மாதாந்திர ஊதியம் அல்லது நிதியுதவி வழங்குவதற்கான வழிகளை ராஸ் அல் கைமா காவல்துறை ஆராய்ந்து வருகிறது.

- Advertisment -

இதற்காக ராஸ் அல் கைமா காவல்துறை சமீபத்தில் சமூக மேம்பாட்டு அமைச்சகத்தை தொடர்பு கொண்டு பேசியுள்ளது. RAK காவல்துறையின் போதைப்பொருள் தடுப்புத் துறையின் தொழில்நுட்ப ஆதரவு துறை தலைவர் கர்னல் சுல்தான் காலித் அல் காசிமி பேசுகையில், போதைப்பொருட்களை பயன்படுத்துவதை நிறுத்தியவர்களுக்கும் “to whom it may concern” சான்றிதழ் வழங்கப்படுகிறது.

இந்த சான்றிதழ் போதையின் பாதையிலிருந்து மீண்டவர்கள்  தங்களது முந்தைய வேலையில் சேரவும், சம்பளமும், நிலையான வாழ்க்கையும் பெற உதவும் என்றார். போதை அடிமைத்தனத்திலிருந்து சீர்திருந்தி வருவோருக்கான மறுவாழ்வு மற்றும் ஒருங்கிணைத்தல் தொடர்பான முயற்சிகள் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகின்றன.

அவர்கள் அனைவரும் மீண்டும் போதை மருந்துகளைப் பயன்படுத்துவதில்லை என்பதை உறுதிப்படுத்த வழக்கமான சோதனைகளுக்கு உட்படுத்தப்படுகிறார்கள். ஃபெடரல் போதைப்பொருள் தடுப்புச் சட்டத்தின் 43-வது பிரிவின்படி, போதைப்பொருள் பயன்படுத்துதல் தொடர்பான விவகாரத்தில் போலீஸ் அல்லது பொது வழக்கின் உதவியை கோருபவர்களுக்கு எதிராக எந்தவொரு வழக்கும் தாக்கல் செய்யப்படமாட்டாது என்ற அவர், ஒரு நபர் போதைக்கு அடிமையாக மாறுவதற்கான ஆறு முக்கிய காரணங்களை பட்டியலிட்டார்.

கெட்ட நண்பர்களின் சகவாசம், நேரத்தை எப்படி கழிப்பது என்று தெரியாமல் இருப்பது,வேலையின்மை, குடும்ப தகராறுகள், வெளிநாடுகளுக்குச் சென்று அங்குள்ள அந்நியர்களுடன் பழகுவது, புதிதாக எதையாவது செய்ய வேண்டும் என்ற ஆர்வத்தில் தீய பழக்கங்களின் பக்கம் பார்வை திரும்புவது உள்ளிட்ட 6 காரணிகள் போதையின் பக்கம் இழுத்து சென்றுவிடுவதாக குறிப்பிட்டுள்ளார்.