UAE Tamil Web

ஏமாற்றிய ஏஜெண்ட்: ஒரே பெட்ரூம் கொண்ட அபார்ட்மெண்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 64 இந்தியர்களைக் காப்பாற்றிய நபர்..!

workers

ஷார்ஜாவின் வழக்கமான ஒருநாளில் சமூக சேவகரான ஷிராளி ஷேக் முஸாபர் தனது காரில் சென்றுகொண்டிருந்திருக்கிறார். அப்போது, சாலையோரமாக சிலர் அமர்ந்து அழுதுகொண்டிருப்பதை அவர் பார்த்திருக்கிறார். உடனடியாக வாகனத்தை பார்க் செய்துவிட்டு அவர்களை நோக்கிச் சென்ற ஷேக், அவர்களுக்கு அருகில் அமர்ந்து என்ன ஆயிற்று எனக் கேட்டிருக்கிறார். இப்படித்தான் வெளியேவந்திருக்கிறது அமீரகத்தில் அடைத்துவைக்கப்பட்ட 64 இந்தியர்களின் மோசமான நிலைமை குறித்த உண்மை.

இந்தியாவின் பீகார், டெல்லி, உத்திரப் பிரதேசம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 64  இந்தியர்களை வேலைவாங்கித் தருவதாகக்கூறி உத்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஏஜெண்ட் ஒருவர் அமீரகத்திற்கு அழைத்துவந்திருக்கிறார். இதற்காக நபர் ஒருவரிடமும் இருந்து தலா 1,50,000 ரூபாயை ஏஜெண்ட் வாங்கியிருக்கிறார்.

புது நாடு, புதிய வேலை, புதிய வாழ்க்கை என மகிழ்ச்சியுடன் கிளம்பிவந்த தொழிலாளர்களை விமான நிலையத்தில் 14 மணிநேரம் தவிக்கவிட்டு அதன்பின்னர் 1 படுக்கையறை கொண்ட அபார்ட்மெண்டிற்கு வேன் மூலமாக அழைத்துச் சென்றிருக்கிறார் ஏஜெண்ட்.

வேனில் வருகையில் அனைவரின் பாஸ்போர்ட்டையும் அவர் வாங்கியிருக்கிறார். அப்பார்ட்மெண்ட் சென்ற பிறகு அனைவருக்கும் ஒரு சப்பாத்தி மற்றும் டீ மட்டுமே வழங்கப்பட்டிருக்கிறது. சில தினங்கள் கழிந்தும் வேலை குறித்து எதுவுமே பேசாததால், ஏஜெண்டிடம் எப்போது வேலையில் சேரவேண்டும் என தொழிலாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். சரியாக பதில் சொல்லாமல் மழுப்பியிருக்கிறார் அவர். இதுவே தொடர்கதை ஆகியிருக்கிறது.

ஒருகட்டத்தில் பிரச்சினை கைமீறிச் சென்றிருக்கிறது. அப்போது கட்டையால் தொழிலாளர்களைத் தாக்கிய ஏஜெண்ட், போராட்டம் செய்தால் யாருக்கும் வேலை கிடைக்காது, பாஸ்போர்ட் கூட கொடுக்கமாட்டேன் எனத் தெரிவித்திருக்கிறார்.

ஆசை, கனவு எல்லாம் தொலைந்துபோன சோகத்தில் தொழிலாளர்களில் சிலர் சாலையோரம் அமர்ந்து அழுதுகொண்டிருக்கும் வேளையில்தான் ஷேக் உடனான சந்திப்பு நிகழ்ந்திருக்கிறது. தொழிலாளர்கள் தங்கியிருந்த அப்பார்ட்மெண்ட்டிற்குச் சென்ற ஷேக் அவர்களது நிலைமையைக்கண்டு அதிர்ச்சியடைந்திருக்கிறார். அவர்களது விபரங்களை வாங்கிக்கொண்டு நேரடியாக அவர்களைக் காப்பாற்ற களத்தில் குதித்திருக்கிறார்.

அபுதாபியில் உள்ள ஹிதாயத் அதூர் என்னும் சமூக சேவகர், கர்நாடகா NRI தலைவர் மற்றும் தொழிலதிபர் பிரவீன் குமார் ஆகியோரிடம் விஷயத்தினை எடுத்துச் சென்றிருக்கிறார். துணைத் தூதரக அதிகாரிகளுக்கும் இந்த சம்பவம் குறித்து தகவல் தெரிவித்திருக்கிறார்.

இதனையடுத்து துணைத் தூதரகம் அந்த ஏஜெண்ட்களைத் தொடர்புகொண்டு, இந்த சிக்கலை உடனடியாக தீர்க்க வேண்டும் என உத்தரவிட்டிருக்கிறது. இதனடிப்படையில் ஷேக் மற்றும் அவரது நண்பர் அதூர் நேரடியாக ஏஜெண்டை சந்தித்து 64 பேருடைய பாஸ்போர்ட்டையும் பெற்று தொழிலாளர்களிடத்தில் வினியோகம் செய்திருக்கிறார்கள்.

தங்கியிருந்தவர்களுள் தச்சர் மற்றும் ஏசி மெக்கானிக் என தேர்ந்த பணியாளர்கள் அமீரகத்திலேயே தங்கி புதிய வேலையில் சேர விருப்பப்படுவதாக தெரிவிக்கவே, அவர்களுக்கு வேலைகிடைக்க ஷேக் முயற்சித்து வருகிறார். இதனிடையே 22 பேர் மீண்டும் இந்தியா செல்வதாக தெரிவிக்கவே, ஏஜென்சி 18 பேருக்கு மட்டுமே விமான டிக்கெட் வசதி செய்துதரமுடியும் எனச் சொல்லியிருக்கிறது.

அதன்பின்னர், 4 பேருக்கான விமான டிக்கெட் செலவை தான் ஏற்றுக்கொள்வதாக ஷேக் தெரிவித்திருக்கிறார். விரைவிலேயே அவர்கள் நாடு திரும்புவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒற்றை படுக்கையறை கொண்ட அப்பார்ட்மெண்ட்டில் வாழ்க்கையைத் தொலைத்த 64 இந்தியர்களின் எதிர்காலத்தை வெளிச்சம் நிறைந்ததாக மாற்றிய ஷேக்கிற்கு அமீரக வாழ் இந்தியர்கள் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர்.

workers
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap