அபுதாபியை மையமாகக்கொண்டு இயங்கிவரும் எதிஹாட் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி ஒன்றினை வெளியிட்டுள்ளது. செப்டம்பர் 23 முதல் மார்ச் 31, 2022 ஆம் தேதிவரையில் அபுதாபிக்கு வரும் மற்றும் அபுதாபியிலிருந்து பயணிக்கும் நபர்களுக்கு துபாய் Expo 2020 ற்கான டிக்கெட் இலவசமாக வழங்கப்படும் என எதிஹாட் தெரிவித்துள்ளது.
Exponential Abu Dhabi என்னும் திட்டத்தின் வழியாக இந்த டிக்கெட் விநியோகம் நடைபெற இருக்கிறது.
வரும் அக்டோபர் 1 ஆம் தேதி துவங்க இருக்கும் துபாய் எக்ஸ்போ 2020 நிகழ்வில் உலகின் 192 நாடுகள் பங்கேற்கின்றன. ஏற்கனவே துபாயை மையமாகக்கொண்டு இயங்கும் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் நிறுவனம் தங்களது வாடிக்கையாளர்களுக்கு எக்ஸ்போ டிக்கெட்டை இலவசமாக வழங்குவதாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
வெளிநாடுகளிலிருந்து அபுதாபி வருவோருக்கு கொரோனா தடுப்பூசியின் 2 டோஸ்களையும் எடுத்திருக்கும்பட்சத்தில் குவாரண்டைன் தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அபுதாபி விமான நிலையத்திலிருந்து 45 நிமிடத்தில் எக்ஸ்போ 2020 சிட்டிக்கு செல்லலாம் என்பதால் எதிஹாடின் இந்த அறிவிப்பு அதிக அளவிலான மக்களை கவர்ந்திழுக்கும் என நம்பப்படுகிறது.
