பொதுவாகவே வசதி படைத்தவர்கள் சொகுசுக்காரை வாங்கியபின்னர், பெரும்பணம் கொடுத்து வாகனத்தின் எண்ணைப் பெறுவார்கள். ஆனால் வித்தியாசமாக அமீரகத்தில் வசித்துவரும் சீனாவைச் சேர்ந்த நபர் ஒருவர், வாகனத்தின் நம்பரான X-1 பிடித்துப்போனதால் 40 லட்சம் திர்ஹம்ஸ் மதிப்புள்ள புது ரோல்ஸ் ராய்ஸ் காரையே வாங்கியுள்ளார்.
ஸியான் ஜுன் ஸூ (Xian Jun Xu) எனப் பெயர்கொண்ட முதலீட்டாளர் தான் இந்தக் காரை வாங்கியுள்ளார். இதுகுறித்து அவர் பேசுகையில்,”எனக்கு அந்த காரின் நம்பர் பிளேட் மிகவும் பிடித்துப்போய்விட்டது. என்னுடைய பெயரின் முதல் எழுத்தில் வாகனத்தின் நம்பரும் துவங்குவது எனக்குப் பிடித்திருந்தது” என்றார்.
ஆனாலும் தான் காரை வாங்கிய விலையை அவர் கூற மறுத்துவிட்டார்.
இம்மாதிரியான சொகுசுக் காரினை பதிவு செய்வதை கொண்டாடும் விதமாக ராஸ் அல் கைமா காவல்துறையின் ஜெனரல் ரிசோர்ஸ் அத்தாரிட்டி (General Resources Authority) சிறிய விழா ஒன்றிற்கு ஏற்பாடு செய்தது. இந்த சொகுசுக் காரானது அப்போது ரிஜிஸ்டர் செய்யப்பட்டது. குறிப்பிட்ட சிலர் மட்டுமே இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
தனக்கு இந்த காரின் டிசைன் மிகவும் பிடித்திருப்பதாகவும், தன்னுடைய குடும்பத்தினருக்கு அளிக்க, இதேபோல X வரிசையில் துவங்கும் இரண்டு கார்களை வாங்க இருப்பதாகவும் ஸு தெரிவித்தார்.