உம் அல் குவைன் செல்லும் ஷேக் முகமது பின் சயீத் சாலையில் கடந்த சனிக்கிழமை இரவு இரு கார்கள் நேருக்கு நேர் மோதியுள்ளன. இந்த விபத்தில் படுகாயமடைந்த 56 வயது லெபனானைச் சேர்ந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது 20 வயது மகள் உயிருக்குப் போராடும் நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்த விபத்து குறித்து உம் அல் குவைன் போக்குவரத்து காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதுமே, தேசிய ஆம்புலன்ஸ், காவல்துறை மீட்புப்படை ஆகியவை சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றன.
படுகாயமடைந்திருந்த இளம்பெண் ஷேக் கலீஃபா மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார். முதற்கட்ட விசாரணையில் எதிரே வந்த காரை ஓட்டிவந்த அரபு நபர் குடிபோதையில் இருந்தது தெரியவந்திருக்கிறது.
வாகனவோட்டிகள் பயணத்தின்போது கண்டிப்பாக சீட்பெல்ட் அணியவேண்டும் எனவும் சாலை விதிமுறைகளை மதிக்கவேண்டும் எனவும் காவல்துறை மக்களை வலியுறுத்தியுள்ளது.
