வரும் ஆங்கிலப் புத்தாண்டினை முன்னிட்டு அமீரக அரசு மனிதவள மேம்பாட்டிற்கான பெடரல் ஆணையம் அரசு ஊழியர்களுக்கு 2022 ஆம் ஆண்டிற்கான முதல் விடுமுறையை அளிப்பதாக அறிவித்துள்ளது. அதாவது ஜனவரி 1 ஆம் தேதி (சனிக்கிழமை) அரசு ஊழியர்களுக்கு விடுமுறையாக இருக்கும். அதே தேதியில் அமீரகத்தில் வார விடுமுறை மாற்றமும் அமலுக்கு வருகிறது.
ஜனவரி 1, 2022 ஆம் தேதிமுதல் அமீரகத்தில் அரசு ஊழியர்களுக்கு வெள்ளிக்கிழமை மதியம் முதல், சனி மற்றும் ஞாயிறு வார விடுமுறையாக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
3 நாட்கள் விடுமுறை
டிசம்பர் 31 ஆம் தேதி வெள்ளிக்கிழமையன்று வருகிறது. ஆகவே அன்று வார விடுமுறை விடப்படும் (தற்போது இருக்கும் நடைமுறையின்படி) ஜனவரி 1 ஆம் தேதி சனிக்கிழமை மற்றும் ஜனவரி 2 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் புதிய வார விடுமுறை அறிவிப்பின்படி அந்த இரண்டு நாட்களும் விடுமுறைகளாக இருக்கும்.
ஆக மொத்தம் 3 நாட்கள் விடுமுறை கிடைக்க இருக்கிறது. இருப்பினும் புதிய வார விடுமுறை மாற்றம் அரசு ஊழியர்களுக்கு மட்டுமே பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.