UAE Tamil Web

ஃபிரிட்ஜுக்குள் இருந்த உடம்பு ; அமீரகத்தை உலுக்கிய கொடூர கொலை – 5 பேருக்கு மரணதண்டனை விதித்த நீதிமன்றம்..!

knife_attack_

அஜ்மான் காவல்நிலையத்திற்கு போன் செய்த ஆசியாவைச் சேர்ந்த நபரால் படபடப்புடன் தான் பேச முடிந்தது. காவல்துறை கட்டுப்பாட்டு அதிகாரி,” பொறுமையாக விஷயத்தைச் சொல்லுங்கள்” என ஆசுவாசுப்படுத்த, ஆசிய நபர் தனது புகாரைத் தெரிவித்திருக்கிறார்.

தொழிலதிபரான தனது நண்பர் சில நாட்களாக போன் செய்தால் எடுக்கவில்லை எனவும் அவரது வீடு பூட்டிக்கிடப்பதாகவும் தனக்கு உதவும்படியும் ஆசியர் போனில் தெரிவிக்க, உடனடியாக அஜ்மான் காவல்துறை அந்த குடியிருப்பு வளாகத்திற்குச் சென்றது.

கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்ற காவல்துறை வீடு முழுவதும் தேடியும் தொழிலதிபரைக் காணவில்லை. சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்ய அதிகாரிகளை அனுப்பிய நொடியில், ஓர் அதிகாரி அங்கிருந்த ஃபிரிட்ஜை திறந்திருக்கிறார். அடுத்தகணமே அனைவரின் முகத்திலும் வியர்வை வழியத் துவங்கியது.

உடம்பு முழுவதும் காயங்களோடு ரத்த வெள்ளத்தில் நனைந்தபடி தொழிலதிபரின் உயிரற்ற உடம்பு ஃபிரிட்ஜிற்குள் இருந்திருக்கிறது. பரபரப்பான போலீஸ் சிசிடிவி பதிவுகளை ஆராய்ந்ததில் கொலை நடந்த அன்று தொழிலதிபர் அவரது வீட்டிற்கு வருகையில் அவரை இரண்டு நபர்கள் பின்தொடர்ந்து வந்ததைக் கவனித்திருக்கின்றனர்.

அதன்பின்னர் சுமார் இரண்டரை மணி நேரம் கழித்து இறந்தவரின் வீட்டிலிருந்து 5 பேர் நடந்து செல்வதும் அதில் பதிவாகியிருக்கிறது. உடனடியாக விசாரணையை முடுக்கிவிட்ட காவல்துறைக்கு சற்று நேரத்தில் அடுத்த அதிர்ச்சி காத்திருந்தது.

விமான நிலைய கண்காணிப்பு அறைக்கு அனுப்பப்பட்ட கொலையாளிகளின் புகைப்படங்களைப் பார்த்த அதிகாரிகள் கொலையாளிகள் வெளிநாட்டிற்கு தப்பிச்செல்ல இருப்பதாகவும், அவர்கள் ஏறிய விமானம் பறக்கக் காத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

உடனடியாக விமானத்தை ரத்து செய்ய உத்தரவிட்ட அதிகாரிகள், விமானத்தில் இருந்த கொலையாளிகளை கைது செய்தனர்.

விசாரணை

காவல்துறையின் தீவிர விசாரணையில் கொலையாளிகளில் இருவர், கொலை செய்யப்பட்டவரின் வீட்டருகே வசித்து வந்தது தெரியவந்திருக்கிறது. கொலை நடந்த அன்று ஏசி டக்ட்-ல் காத்திருந்த 3 கொலையாளிகள் தொழிலதிபரின் வீட்டில் இருந்த 109000 திர்ஹம்ஸ் பணத்தை கொள்ளையடிக்கும் போது தொழிலதிபர் வீட்டின் அருகே வருவதை தங்களது சக கூட்டாளிகளின் மூலமாகத் தெரிந்துகொண்டு அங்கேயே மறைந்திருக்கின்றனர்.

தொழிலதிபரின் பின்னால் கண்காணித்தபடி வந்த இருவர் தான் இந்தத் தகவலை மற்றவர்களிடத்தில் தெரியப்படுத்தியிருகின்றனர். வீட்டிற்குள் கொள்ளை நடந்ததை பார்த்ததும் அதிர்ச்சியான தொழிலதிபரை இந்த 5 பேர் கொண்ட கும்பல் கண்மூடித்தனமாக தாக்கியிருக்கிறது.

அவரது கழுத்தை நெரித்த கும்பல், பின்னர் கத்தியால் குத்தி கொலை செய்திருக்கிறது. உடலை ஃபிரிட்ஜிற்குள் வைத்துவிட்டு, தடயங்களை அழித்துவிட்டு தங்களது வீட்டிற்குச் சென்று உடைகளை மாற்றியிருக்கின்றனர் கொலையாளிகள்.

உடனடியாக வேறு எமிரேட்டிற்கு பயணம் செய்து, அங்கிருந்து விமானம் மூலமாக வெளிநாட்டிற்கு தப்பிக்க நினைத்த கொலையாளிகளின் திட்டத்தை காவல்துறை முறியடித்திருக்கிறது.

தீர்ப்பு

அஜ்மான் குற்றவியல் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்றுவந்த நிலையில் நேற்று நீதிபதி தீர்ப்பை அறிவித்தார். அதில் ஆசியாவைச் சேர்ந்த கொலையாளிகள் அனைவருக்கும் மரணதண்டனை விதிப்பதாகவும் அவர்கள் திருடிய 109000 திர்ஹம்ஸ் பணத்தை இறந்தவரின் குடும்பத்தாரிடம் ஒப்படைக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், குற்றவாளிகள் மீது சிவில் வழக்குத் தொடுக்கவும் நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது. இறந்தவருக்கு 3 குழந்தைகள் இருப்பதாக வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அஜ்மானையே உலுக்கிய இந்த கொடூர கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டிருப்பது அமீரகம் முழுவதும் வைரலாகப் பேசப்பட்டு வருகிறது.

knife_attack_
4 Shares
Share via
Copy link