UAE Tamil Web

அமீரக கொடி தினம் : அமீரக தேசியக் கொடி பற்றி உங்களுக்குத் தெரிந்திடாத சுவாரஸ்யத் தகவல்கள்..!

flag UAE

ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 3 ஆம் தேதி அமீரக கொடி தினம் கொண்டாடப்படுகிறது. அமீரகத்தின் அடையாளத்தை பறைசாற்றவும் ஒற்றுமையை வலியுறுத்தும் நோக்கோடும் 2013 ஆம் ஆண்டிலிருந்து இந்நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.

- Advertisment -

அமீரகத்தின் தலைவராக பெருமதிப்பிற்குரிய ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யான் தேர்ந்தெடுக்கப்பட்ட நாளாகவும் நவம்பர் 3 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.

கடந்த வருட (2019) அமீரக கொடி தினத்தின் போது, துபாயின் கைட் கடற்கரையில் 4500 அமீரக கொடிகள் மூலமாக அமீரகத்தின் துணைத்தலைவரும் பிரதமரும் துபாயின் ஆட்சியாளருமான பெருமதிப்பிற்குரிய ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் மற்றும் அபுதாபியின் பட்டத்து இளவரசரும் அமீரக ஆயுதப்படையின் தலைமைத் துணைத் தளபதியுமான பெருமதிப்பிற்குரிய ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் ஆகிய இவருடைய உருவங்களும் உருவகப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கொடி தேர்ந்தெடுக்கப்பட்ட வரலாறு

அமீரக தேசியக்கொடியை உருவாக்க நாடு தழுவிய அளவில் போட்டி ஒன்று நடத்தப்பட்டது. 1,030 க்கும் மேற்பட்ட கொடிகள் போட்டியின்போது சமர்ப்பிக்கப்பட்டன. அதிலிருந்து 6 கொடிகள் இறுதிச் சுற்றுக்கு தகுதியாகி, பின்னர் அதிலிருந்து ஒரு கொடி தேர்ந்தெடுக்கப்பட்டது. அதுவே தற்போதைய அமீரக கொடியாகும்.

இதனை உருவாக்கியவர் அப்துல்லா முகமது அல் மாய்னாஹ் என்னும் அமீரக குடிமகனாவார்.

முதல் முறை

1971 ஆம் ஆண்டு 7 எமிரேட்களின் ஆட்சியாளர்களும் துபாயின் ஜூமெய்ரா அரண்மனையில் சந்தித்துப் பேசி எமிரேட்களை ஒருங்கிணைக்க ஒப்புதல் அளித்தனர். அதன்பிறகு அமீரகம் உருவான நாளான டிசம்பர் 2, 1971 ஆம் ஆண்டு அமீரக கொடி முதன்முறையாக ஏற்றப்பட்டது.

வர்ணங்கள் சொல்லும் கதை

அமீரக கொடியில் மொத்தம் நான்கு நிறங்கள் இடம்பெற்றுள்ளன. இவ்வண்ணங்கள் உணர்த்தும் செய்தி குறித்து கீழே காணலாம்.

பச்சை

வளர்ச்சி, செழுமை, முன்னேற்றம், அற்புதங்கள், நீடித்த வளர்ச்சி மற்றும் முன்னேற்றம்.

வெள்ளை 

நற்செயல், ஈகை மற்றும் பெருந்தன்மை, சாதனைக்கான முயற்சி மற்றும் அமைதியை பரவச்செய்தல்.

கறுப்பு

அதிகாரம், வலிமை மற்றும் துயரிலிருந்து மீண்டெழுதல்.

சிவப்பு

அமீரகத்தின் புதல்வர்களின் தியாகம், அவர்களுடைய பெருமைவாய்ந்த வீரம், தியாகம் நிறைந்த அவர்களுடைய இரத்தம்.

– ஆகியவற்றின் அடையாளமாகவே அமீரக தேசியக்கொடியில் மேற்கண்ட வண்ணங்கள் இடம்பெற்றுள்ளன.