UAE Tamil Web

துபாய் வருபவர்கள் GDRFA விடம் கட்டாயம் அனுமதி பெறவேண்டும் – அமீரக அரசு அறிவிப்பு..!

dubai-airport_

ஒருவழியாக இந்தியர்களுக்கு மாதக்கணக்கில் பூட்டப்பட்ட தனது கதவுகளை அமீரகம் திறந்திருக்கிறது. ஏப்ரல் 25 ஆம் தேதிமுதல் நடைமுறைக்கு வந்த பயணத்தடையால் இந்தியா, பாக்கிஸ்தான், நேபாளம், உகாண்டா, நைஜீரியா, வங்கதேசம் ஆகிய நாடுகளில் இருந்து பயணிகள் விமானம் அமீரகம் வரத் தடை விதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் அமீரக தேசிய அவசரநிலை நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையம் இந்த தடையை விலக்கியிருக்கிறது. அதன்படி, மேற்கண்ட நாடுகளைச் சேர்ந்த செல்லுபடியாகும் அமீரக ரெசிடென்சி விசா வைத்திருப்பவர்கள் அனைவரும் கொரோனாவின் 2 டோஸ் தடுப்பூசிகளை எடுத்திருக்கும் பட்சத்தில் அவர்கள் ஆகஸ்டு 5 ஆம் தேதிமுதல் அமீரகம் வர ICA விடம் விண்ணப்பிக்கலாம். தடுப்பூசி சான்றிதழை பயணிகள் வைத்திருக்க வேண்டும்.

GDRFA அனுமதி தேவையா..?

இந்தியா, இலங்கை உள்ளிட்ட நாடுகளில் இருந்து அமீரகம் திரும்பும் நபர்கள் அதாவது துபாய் தவிர பிற எமிரேட்டுகளுக்கு வருபவர்கள் அமீரக அடையாள மற்றும் குடியுரிமைக்கான பெடரல் ஆணையத்திடம் (ICA) ஒப்புதல் பெற்றிருக்க வேண்டும். ICA வில் அனுமதி பெறுவது எப்படி என்பது குறித்து தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

அதேவேளையில் இந்தியா, இலங்கை உள்ளிட்ட நாடுகளில் இருந்து துபாய் திரும்புபவர்கள் குடியிருப்பு மற்றும் வெளியுறவுத்துறைக்கான தலைமை இயக்குநரகத்திடம் (GDRFA) ஒப்புதல் பெற்றிருக்க வேண்டும் என அமீரக பொது சிவில் விமானப் போக்குவரத்து இயக்குனரகம் (GCAA) தெரிவித்துள்ளது.

விமான நிறுவனங்கள் மற்றும் ஆப்பரேட்டர்களுக்கு GCAA வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் இந்தத் தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும்  அமீரக அரசு விதித்துள்ள விதிமுறைகளை ஒவ்வொரு பயணியும் பின்பற்றியிருப்பது உறுதியான பின்புதான் அவர்கள் பயணம் செய்ய அனுமதிக்கப்பட வேண்டும் எனவும் விமான நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

வழிமுறைகளை பின்பற்றாத எந்த ஒரு பயணியையும் விமானத்தில் பயணிக்க கட்டாயம் அனுமதிக்கக்கூடாது என GCAA வலியுறுத்தியுள்ளது.

அமீரகம் வருபவர்கள் பின்பற்றவேண்டிய விதிமுறைகள் குறித்த முழுமையான தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்.

dubai-airport_
19 Shares
Share via
Copy link
Powered by Social Snap