ஒருவழியாக இந்தியர்களுக்கு மாதக்கணக்கில் பூட்டப்பட்ட தனது கதவுகளை அமீரகம் திறந்திருக்கிறது. ஏப்ரல் 25 ஆம் தேதிமுதல் நடைமுறைக்கு வந்த பயணத்தடையால் இந்தியா, பாக்கிஸ்தான், நேபாளம், உகாண்டா, நைஜீரியா, வங்கதேசம் ஆகிய நாடுகளில் இருந்து பயணிகள் விமானம் அமீரகம் வரத் தடை விதிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் அமீரக தேசிய அவசரநிலை நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையம் இந்த தடையை விலக்கியிருக்கிறது. அதன்படி, மேற்கண்ட நாடுகளைச் சேர்ந்த செல்லுபடியாகும் அமீரக ரெசிடென்சி விசா வைத்திருப்பவர்கள் அனைவரும் கொரோனாவின் 2 டோஸ் தடுப்பூசிகளை எடுத்திருக்கும் பட்சத்தில் அவர்கள் ஆகஸ்டு 5 ஆம் தேதிமுதல் அமீரகம் வர ICA விடம் விண்ணப்பிக்கலாம். தடுப்பூசி சான்றிதழை பயணிகள் வைத்திருக்க வேண்டும்.
GDRFA அனுமதி தேவையா..?
இந்தியா, இலங்கை உள்ளிட்ட நாடுகளில் இருந்து அமீரகம் திரும்பும் நபர்கள் அதாவது துபாய் தவிர பிற எமிரேட்டுகளுக்கு வருபவர்கள் அமீரக அடையாள மற்றும் குடியுரிமைக்கான பெடரல் ஆணையத்திடம் (ICA) ஒப்புதல் பெற்றிருக்க வேண்டும். ICA வில் அனுமதி பெறுவது எப்படி என்பது குறித்து தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.
அதேவேளையில் இந்தியா, இலங்கை உள்ளிட்ட நாடுகளில் இருந்து துபாய் திரும்புபவர்கள் குடியிருப்பு மற்றும் வெளியுறவுத்துறைக்கான தலைமை இயக்குநரகத்திடம் (GDRFA) ஒப்புதல் பெற்றிருக்க வேண்டும் என அமீரக பொது சிவில் விமானப் போக்குவரத்து இயக்குனரகம் (GCAA) தெரிவித்துள்ளது.
என்னுடைய விசா அமீரகம் வருவதற்கு தகுதியானதா என்பதை எவ்வாறு அறிந்து கொள்வது?
துபாய் குடியிருப்பாளர்கள் தங்களது பாஸ்போர்ட் மற்றும் எமிரேட்ஸ் ஐடியின் எண்களை கொண்டு இதனை சரி பார்க்கலாம். துபாய் வாழ் மக்கள் இந்த லிங்கில் சென்று உங்களுடைய விசா குறித்து அறிந்து கொள்ளலாம்.
துபாய் தவிர்த்து பிற எமிரேட்களில் வசிக்கும் நபர்கள் தங்களுடைய விசா அமீரகம் வர தகுதியானது தானா என்பதை அறிய இந்த லிங்கை பயன்படுத்தவும்.
அமீரகத்தை விட்டு வெளியே ஆறு மாத காலம் தங்கி இருந்தால் நான் இப்போது என்ன செய்ய வேண்டும்?
வழக்கமான அமீரக விதிகளின்படி குடியிருப்பாளர் ஒருவர் அமீரகத்தை விட்டு ஆறு மாத காலம் வெளியே தங்கி இருந்தால் அவரது விசா காலாவதியாகிவிடும். அவர் மீண்டும் அமீரகத்திற்கு வர வேண்டுமேயானால் புதிய நுழைவு அனுமதி பெற்றிருக்க வேண்டும்.
GDRFA இணையதளத்தில் தற்போதைய சூழ்நிலையில் இந்த மனுக்கள் முன்னெச்சரிக்கை காரணமாக தள்ளுபடி செய்யப்படலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது இதில் முக்கியமாக நாம் கருத வேண்டிய விஷயம் என்னவென்றால் இப்படியான விண்ணப்பதாரர்கள் அமீரகத்திற்கு நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்பது உண்மையல்ல என்பதுதான். அமீரகத்திற்கு வெளியே 6 மாத காலம் தங்கியிருந்தவர்கள் ரீ – என்ட்ரி எனப்படும் மீள் நுழைவு அனுமதியைப் பெறுதல் வேண்டும்.
துபாயில் வசிப்பவர்கள் re-entry காக விண்ணப்பிக்க இந்த லிங்கில் செல்லவும் பிறர் ஏடுகளில் வசிப்போர் இந்த லிங்கை பயன்படுத்தவும்.
துபாய் தவிர பிற எமிரேட்களில் வசிப்பவர்கள் இந்த லிங்கைப் பயன்படுத்தவும்.
அதன் பிறகு என்ன செய்ய வேண்டும்?
அமீரகத்திற்கு வெளியே ஆறு மாத காலம் தங்கியிருந்ததால் உங்களது விசா காலாவதியாகி இருந்தால் உங்களுடைய முதலாளி அல்லது ஸ்பான்சரிடமிருந்து ஒரு கடிதத்தைப் பெற வேண்டும். அந்தக் கடிதத்தில் நீங்கள் அமீரகத்தில் பணிபுரிந்தவர் என்பதற்கான உத்தரவாதத்தை அவர்கள் அளித்திருக்க வேண்டும். பயணத்தின்போது இமிக்ரேஷன் அதிகாரிகளிடம் நீங்கள் இந்த கடிதத்தை சமர்ப்பிக்க வேண்டும்.
வெளிநாடுகளில் இருந்து கொண்டே நுழைவு அனுமதிக்கு விண்ணப்பிக்கலாமா?
விண்ணப்பிக்கலாம். வெளிநாடுகளில் இருந்து அமீரகம் வருவோர் பெற்றிருக்க வேண்டிய இந்த அனுமதியை ICA அல்லது GDRFA வழங்குகிறது. அமீரகத்திற்குள் குறிப்பிட்ட காலம் நீங்கள் தங்குவதற்கான அனுமதி இது. இந்த அனுமதி அச்சு காகிதமாகவோ டிஜிட்டல் வடிவிலோ இருக்கலாம். முன்கூட்டியே நுழைவு அனுமதி பெறவேண்டுமா? அல்லது வருகையின்போது பெறலாமா? என்பதை அறிந்துகொள்வது உசிதம்.
போலவே உங்களுடைய ஸ்பான்சரும் உங்களுக்காக நுழைவு அனுமதி கோரி விண்ணப்பிக்கலாம். GDRFA வின் இணையதளத்தில், உங்களுடைய ஸ்பான்சர் இதற்கான கட்டணத்தை ஆன்லைன் மூலமாகவோ அல்லது ஆஃப்லைன் மூலமாகவோ செலுத்தலாம். ஒருவருடைய ஸ்பான்சர் என்பவர் தனி நபராகவோ அல்லது நிறுவனமாக இருக்கலாம்.
உங்களுடைய சூழ்நிலையைப் பொறுத்து அமீரகத்தில் வழங்கப்படும் பல்வேறு வகையான நுழைவு அனுமதிகளில் உங்களுக்கு உகந்ததை தேர்ந்தெடுக்கலாம். உதாரணமாக வேலை, குடும்பங்களை சந்தித்தல், சுற்றுலா, டிரான்சிட், மருத்துவம் ஆகியவற்றிற்காக நுழைவு அனுமதியைப் பெறலாம்.
இவை இரண்டு மாத காலம் செல்லுபடியாகக் கூடியவை. இரண்டு மாதங்கள் கழித்து இவை தாமாகவே காலாவதியாகிவிடும். அவற்றின் செல்லுபடியாகும் காலத்தை நீட்டிக்க முடியாது.
என்னுடைய விசா காலாவதியாகி இருந்தால் நான் என்ன செய்ய வேண்டும்?
தற்போதைய சூழ்நிலையில் காலாவதியான ரெசிடென்சி விசாக்களை வைத்திருப்பவர்கள் அமீரகத்திற்குள் வரலாமா என்பது குறித்து அதிகாரிகள் எவ்வித தகவலையும் அறிவிக்கவில்லை. முக்கியமாக விசா காலாவதியானவர்களுக்கு வழங்கப்படும் கிரேஸ் பீரியடான 30 நாட்களில் இருப்பவர்கள் குறித்தும் எந்த தகவலும் வெளியாகவில்லை.
ஆகவே உங்களுடைய ஸ்பான்சர் உங்களுடைய பழைய விசாவை கேன்சல் செய்து விட்டு புதிய நுழைவு அனுமதிக்காக விண்ணப்பித்தல் வேண்டும்.
வெளிநாடுகளில் இருந்தபடி விசாவை நீட்டிக்கலாமா?
தற்போதைய சூழலில் இதற்கு அமீரக அரசு ஒப்புதல் அளிக்கவில்லை. இருப்பினும் கொரோனா கட்டுப்பாடுகள் முழுமையாக தளர்த்தப்பட்டதுடன் இந்த சேவை நடைமுறைப்படுத்தப்படும் என டிராவல் ஏஜெண்டுகள் மற்றும் துணைத் தூதரகங்கள் தெரிவித்துள்ளன.