இளம்பெண்கள், சிறுமிகள் ஆகியவர்களின் வறுமையைப் பயன்படுத்தி, அவர்களை வேட்டையாடத்துடிக்கும் பல கும்பல்கள் அமீரகத்தில் இருக்கின்றன. தெற்காசியாவில் இருந்து இளம்பெண்களை வேலை வாங்கித்தருவதாகக்கூறி அமீரகம் அழைத்துவந்து அவர்களை கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் தள்ளுவதை வழக்கமாகக் கொண்டு இயங்கும் ஒரு கும்பலை சமீபத்தில் கைது செய்திருக்கிறது துபாய் காவல்துறை.
பாகிஸ்தானைச் சேர்ந்த 17 வயது சிறுமியை, ஆடைகள் விற்பனை மையத்தில் வேலைக்கு சேர்த்து விடுவதாகச் சொல்லி அமீரக அழைத்துவந்திருக்கிறார் ஒரு பெண்மணி. விமான நிலையத்திலிருந்து அல் பரஹா பகுதியில் அமைந்துள்ள அவர்களது கட்டிடத்திற்குச் செல்லும்போதே, சிறுமிக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
அவர் பயந்தது போலவே, கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்த அவர்கள் முயற்சிக்கவே, தப்பிக்க வழியில்லாமல் தவித்திருக்கிறார் அவர். அவரை அழைத்துவந்த பெண்ணும் துபாயில் பல வருடமாக பாலியல் தொழிலில் ஈடுபட்டு வருவதும் அவருக்கு பேரதிர்ச்சியை அளித்திருக்கிறது.
ஹோட்டல்கள், தங்குமிடம் என சிறுமி இடம் மாற்றப்பட்டு, அவர் சிதைக்கப்பட்டிருக்கிறார். இதனிடையே, இந்தக் கும்பலைப் பற்றித் தகவல் அறிந்த துபாய் காவல்துறை, வாடிக்கையாளர் போல சாதாரண உடையில் சென்று, அங்குள்ள சூழ்நிலையை நோட்டம் விட்டிருக்கிறது.
கிடைத்த தகவல் உண்மை எனத் தெரிந்ததும் சற்று தொலைவில் பதுங்கியிருந்த காவல்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கவே, உடனே அந்த கட்டிடம் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.
அடைத்து வைக்கப்பட்டிருந்த 17 வயது சிறுமியை மீட்ட காவல்துறை, அந்தப் பெண் மற்றும் 3 ஆண்களை கைது செய்தது. நீதிமன்ற விசாராணையில் சிறுமியை கடத்திவந்த குற்றச்சாட்டை மறுத்த இவர்களுக்கு தலா 3 வருடம் சிறைத்தண்டனையும் சிறைக்காலம் முடிந்தவுடன் நாடுகடத்தப்பட வேண்டும் எனவும் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
துபாயில் பாலியல் தொழில் செய்துவந்த குற்றத்திற்காகவும் இளம்பெண்ணை ஆசைவார்த்தை கொடுத்து அழைத்துவந்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய குற்றத்திற்காகவும் அந்தப் பெண்ணிற்கு கூடுதலாக 6 மாத காலம் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
