UAE Tamil Web

“ஆபிசர் எல்லாம் லீவுல இருப்பாங்கன்னு நெனச்சோம்” – ஈத் அல் பித்ர் விடுமுறையின்போதும் வேட்டையாடிய காவல்துறை – 115 கிலோ போதைப்பொருளுடன் சிக்கிய கும்பல்..!

sharjah

ஈத் அல் பித்ர் விடுமுறை என்பதால் அதிகாரிகள் பலரும் விடுமுறையில் இருப்பார்கள் என நம்பிய போதைப்பொருள் கடத்தல் கும்பல் தைரியமாக 115 கிலோ போதைப்பொருள் மற்றும் 51,000 போதை மாத்திரைகளை கடல்வழியாக அமீரகத்திற்கு கடத்திவரப் பார்த்திருக்கிறது. ஆனால், கவனமுடன் செயல்பட்ட காவல்துறை இந்தக் கும்பலை கையும் களவுமாகப் பிடித்திருக்கிறது.

இதுகுறித்துப் பேசிய ஷார்ஜா காவல்துறையின் போதைப்பொருள் தடுப்புப்பிரிவு இயக்குனர் லெப்டினன்ட் கர்னல் மஜீத் அல் அசாம்,”எங்களுக்கு இதுகுறித்து ரகசியத் தகவல் கிடைத்தவுடனேயே கடற்கரையோர பாதுகாப்பு முகமை உள்ளிட்ட துறைகளின் உதவிகளைக் கோரினோம். ஈத் அல் பித்ர் விடுமுறை என்பதால் அதிகாரிகள் குறைவாகவே இருப்பார்கள் என கடத்தல் காரர்கள் நினைத்திருக்கிறார்கள்” என்றார்.

கடத்தல்காரர்களிடமிருந்து 115.27 கிலோ போதைப்பொருளும் 51,790 போதை மாத்திரைகளும் கைப்பற்றப்பட்டதாக ஷார்ஜா காவல்துறை தெரிவித்துள்ளது.

சமூகத்தில் சந்தேகத்திற்கு இடமாக ஏதேனும் நடப்பதாக குடியிருப்பாளர்கள் சந்தேகித்தால் அவர்கள் 8004654 என்ற எண்ணிற்கு போன் செய்தோ அல்லது dea@shjpolice.gov.ae என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ தகவல் அளிக்கலாம் என ஷார்ஜா காவல்துறை தெரிவித்துள்ளது.