UAE Tamil Web

இந்தியாவிற்கு 12 ஆக்ஸிஜன் டேங்கர்களை வழங்கிய அமீரகம்..!

c17 Aircraft

ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் இந்தியாவின் மருத்துவமனைகள் திணறிவருகின்றன. இதனையடுத்து அதானி குழுமம் உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து ஆக்சிஜனைப் பெற்று அவற்றை இந்தியா முழுவதும் அனுப்பும் பணியில் ஈடுபட்டுவருகிறது. இந்நிலையில் ஆக்சிஜனை கிரயோஜெனிக் வடிவில் அடைத்துவைக்கப் பயன்படும் 12 காலி டேங்கர்களை துபாயைத் தலைமையாகக்கொண்டு இயங்கிவரும் காலே எனர்ஜி குழுமம் இந்தியாவிற்கு வழங்கியுள்ளது.

அதானி குழுமத்தின் செய்தித் தொடர்பாளர் இதுகுறித்துப் பேசுகையில்,”சவூதி, பாங்காக் ஆகிய நாடுகளில் இருந்து ஆக்சிஜன் டேங்கர்களை வாங்கும் முயற்சியில் ஈடுபட்டுவருகிறோம். இந்த டேங்கர்களில் ஆக்சிஜன் நிரப்பி இந்தியா முழுவதும் அனுப்பும் பணிகள் சவாலாக இருக்கிறது. தற்போது துபாயின் காலே எனெர்ஜி நிறுவனத்திடம் இருந்து பெற்ற காலி டேங்கர்களில் ஆக்சிஜன் நிரப்பி பற்றாக்குறை இருக்கும் மாநிலங்களுக்கு அனுப்ப இருக்கிறோம். இதேபோல அடுத்தவாரம் கூடுதலாக 6 டேங்கர்களை இந்தியாவிற்குத் தர அந்நிறுவனம் ஒப்புதல் அளித்துள்ளது” என்றார்.

இந்திய விமானப் படைக்குச் சொந்தமான C17 விமானத்தில் இந்த டேங்கர்கள் ஏற்றப்பட்டு இந்தியா கொண்டுசெல்லப்பட்டிருக்கின்றன. இந்திய அரசு, இந்திய விமானப் படை மற்றும் துபாய் அரசு ஆகியவை தொடர்ந்து இணக்கமாக செயல்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் தக்க சமயத்தில் இந்தியாவிற்கு ஆக்சிஜன் டேங்கர்கள் வழங்கிய துபாய் அரசுக்கும் காலே எனெர்ஜி குழுமத்திற்கும் நன்றி தெரிவிப்பதாக அவர் தெரிவித்தார்.

c17 Aircraft
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap