அமீரகத்தின் பொன்விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக யூனியன் கோ-ஆப்பரேஷன் தனது ஹைப்பர் மார்கெட்களில் அதிரடி தள்ளுபடியை அறிவித்துள்ளது. அதன்படி 1971 ஆம் ஆண்டு (அமீரக யூனியன் உருவாக்கப்பட்ட ஆண்டு) பிறந்த குடியிருப்பாளர்களுக்கு Afdhal Card இலவசமாக வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் குடியிருப்பாளர்கள் இலவசமாக ஷாப்பிங் செய்யலாம். இருப்பினும் கார்டில் எவ்வளவு தொகை இருக்கும் எனும் விபரம் வெளியிடப்படவில்லை. 100 நாட்களுக்கு நடைபெறும் இந்த மாபெரும் தள்ளுபடித் திருவிழா நவம்பர் 10 ஆம் தேதி துவங்குகிறது.
இதுமட்டுமல்லாமல் 50 பேருக்கு செல்போன், 50 பேருக்கு தங்கக் கட்டிகள், 50 பேருக்கு மவுண்டைன் பைக் மேலும் 50 பேருக்கு 50,000 தமயாஸ் பாய்ண்டுகளும் (Tamayaz points) கிடைக்க இருக்கிறது.
பொருட்களுக்கான விலைக்குறைப்பு, ஆஃபர்கள் மற்றும் பரிசுகளுக்கென மொத்தம் 50 மில்லியன் திர்ஹம்ஸ் தொகை ஒதுக்கப்பட்டுள்ளதாக நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்துப் பேசிய யூனியன் கூப்-ன் CEO திரு.காலித் ஹுமைத் பின் திபன் அல் ஃபலாசி,”200 பொருட்களுக்கான விலையை 100 நாட்களுக்கு குறைக்க இருக்கிறோம். மேலும், அரிசி, பழங்கள், புட்டியில் அடைக்கப்பட்ட குளிர்பானங்கள், இறைச்சி உள்ளிட்ட பொருட்களுக்கு 50 சதவீதத்திற்கும் அதிகமான தள்ளுபடி வழங்கப்பட இருக்கிறது” என்றார்.
நாட்டின் ஒருமைப்பாட்டையும் ஒற்றுமையையும் கணக்கில்கொண்டு அறிவிக்கப்பட்ட இத்திட்டத்தின் மூலம் பெரும்பாலான மக்கள் பயன்பெறுவர் என்று அவர் குறிப்பிட்டார்.
மேலும், இலவச ஆன்லைன் டெலிவரி வசதியும் 50 நாட்களுக்கு நடைமுறைப்படுத்தப்படும் என ஃபலாசி தெரிவித்தார்.