UAE Tamil Web

மருத்துவர்களுக்கு 10 வருடத்திற்கான கோல்டன் விசா வழங்குவதாக அமீரக அரசு அறிவிப்பு..!

Golden Visa

அமீரகத்தின் துணைத்தலைவரும் பிரதமரும் துபாயின் ஆட்சியாளருமான பெருமதிப்பிற்குரிய ஷேக் முகமது பின்  ரஷீத் அல் மக்தூம், அறிவியல், தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் மக்களுக்கு 10 வருடத்திற்கான கோல்டன் விசா வழங்கப்படும் என கடந்தாண்டு அறிவித்திருந்தார்.

இதனடிப்படையில் பல்வேறு மக்களுக்கு இந்த நீண்டகால ரெசிடென்ஸ் விசா வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அமீரகத்தில் பணிபுரியும் மருத்துவர்களுக்கு கோல்டன் விசாவை வழங்க இருப்பதாக அரசு தற்போது அறிவித்துள்ளது.

மருத்துவர்கள் ஜூலை 2021 முதல் செப்டம்பர் 2022 வரையிலும் இதற்காக விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசின் சார்பில் விண்ணப்பிக்கும் மருத்துவர்களின் விபரங்களை ஆய்வு செய்த பிறகு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு விசாவானது வழங்கப்பட இருக்கிறது.

அமீரக சுகாதார ஒழுங்குமுறை அமைப்புகளில் பதிவு செய்துள்ள மருத்துவர்கள் smartservices.ica.gov.ae என்ற இணைய முகவரியில் சென்று கோல்டன் விசாவிற்கு விண்ணப்பிக்கலாம்.

துபாயில் பதிவு செய்துள்ள மருத்துவர்கள் smart.gdrfad.gov.ae என்ற முகவரிக்குச் சென்று விண்ணப்பிக்கலாம். இருப்பினும் நேரடியாகச் சென்று விண்ணப்பிக்க விரும்பும் மருத்துவர்களுக்காக அமீரகம் முழுவதிலும் 7 மையங்களை திறக்க இருப்பதாக அடையாள மற்றும் குடியுரிமைக்கான பெடரல் ஆணையம் (ICA) அறிவித்துள்ளது.

சமூக பாதுகாப்பிற்கும், மக்களின் ஆரோக்கியத்திற்காகவும் அல்லும் பகலும் உழைக்கும் மருத்துவர்களின் தியாகத்தையும் கடின உழைப்பையும் பாராட்டும் விதத்தில் இந்த திட்டத்தை அமீரக அரசு முன்னெடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Golden Visa
3 Shares
Share via
Copy link