UAE Tamil Web

கொரோனாவால் பணியாளர்கள் இறந்தால் அவர்களது குடும்பத்திற்கு 10 வருடத்திற்கு ஊதியம் வழங்கப்படும் – அமீரக நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பு..!

Doctors-covid

இந்தியா, அமீரகம் உள்ளிட்ட 7 நாடுகளில் இயங்கிவரும் அஸ்தர் DM ஹெல்த்கேர் (Aster DM Healthcare) நிறுவனம் கொரோனாவால் உயிரிழந்த தனது பணியாளர்களின் குடும்பங்களுக்கு 10 வருடத்திற்கு ஊதியம் வழங்கப்படும் என அறிவித்திருக்கிறது.

இந்த நிறுவனத்தில் மொத்தம் 2,880 மருத்துவர்கள், 6,280 செவிலியர்கள் மற்றும் 11,000 உதவிப் பணியாளர்கள் பணிபுரிகின்றனர். இதுவரையில் இந்த நிறுவனத்தைச் சேர்ந்த 5,150 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.

இதுகுறித்துப் பேசிய இந்நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் டாக்டர் அசாத் மூப்பன்,” கொரோனா காலத்திலும் போராடும் எங்களுடைய பணியாளர்கள் தான் நிஜ ஹீரோக்கள். தங்களது உயிரைப் பணையம் வைத்து மக்களைக் காக்கும் அவர்களது பணி என்றும் போற்றுதலுக்குரியது. கொரோனாவில் இருந்து மீண்டு, மறுபடியும் பணிக்குத் திரும்பும் பணியாளர்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள். ஆனால் துரதிர்ஷ்டவசமாக சில பணியாளர்கள் மரணமடைந்திருக்கிறார்கள். எங்களுடைய நிறுவனத்தின் புதிய விதிமுறைகளின் படி, கொரோனா மற்றும் பிற வைரஸ் தாக்குதலினால் உயிரிழந்த/உயிரிழக்கும் பணியாளர்களின் குடும்பங்களுக்கு 10 வருடத்திற்கான அடிப்படை சம்பளம் வழங்கப்படும்”

“உயிரிழந்தவர்களில் பெரும்பாலும் அவர்களது குடும்பத்தின் ஒரே ஊதியம் பெறும் நபர்கள். ஆகவே அவர்களது குழந்தைகள், மனைவிகள் மற்றும் வயதான பெற்றோர் தங்களது எதிர்காலத்தைக் குறித்து கவலைகொள்கின்றனர். ஆனால் அஸ்தர் DM ஹெல்த்கேர் நிறுவனம் அவர்களை அரவணைத்துக் காக்கும் எனச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்” என்றார்.

இந்தியா மற்றும் வளைகுடா நாடுகளில் இதுவரையில் இந்த நிறுவனம் 28,000 கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்திருக்கிறது. மேலும் 1.6 மில்லியன் பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்திருக்கிறது.

அஸ்தர் DM ஹெல்த்கேர் நிறுவனத்தின் இந்த அறிவிப்பு பல்வேறு மக்களால் பாராட்டப்பட்டுவருகிறது.

Doctors-covid
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap