UAE Tamil Web

முக்கியச் செய்தி: அமீரகத்தில் இந்த மருந்து மற்றும் மாத்திரைகளை யாரும் பயன்படுத்தவேண்டாம் – சுகாதார அமைச்சகம் அறிவிப்பு..!

drugs

அமீரக சுகாதார மற்றும் நோய்த்தடுப்பு அமைச்சகம் குறிப்பிட்ட சில மருந்துப் பொருட்களுக்கு தடை விதிப்பதாக அறிவித்துள்ளது. அங்கீகார நிபந்தனைகளை மீறியதாக இந்த மருந்துகளுக்கு தடையானது விதிக்கப்பட்டுள்ளது.

- Advertisment -

அமீரகத்தைச் சேர்ந்த மருந்துப்பொருள் தயாரிப்பு நிறுவனங்களான ஜூல்பார் (Julphar ) மற்றும் கல்ஃப் பார்மசூட்டிகல்ஸ் இண்டஸ்ட்ரீஸ் PSC ஆகியவை தயாரித்த மருந்துகள் துபாயில் மேற்கொள்ளப்பட்ட தர ஆய்வில் தகுதி பெறாததாலும், அந்நிறுவனங்களே மருந்துகளை திரும்ப பெறுவதாக அறிவித்ததாலும் இந்த மருந்துகளை மக்கள் யாரும் பயன்படுத்தவேண்டாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருந்தகங்கள், சுகாதார சேவை பயிற்றுநர்கள் ஆகியோர் இந்த மருந்துகளை மக்களுக்கு வழங்க வேண்டாம் எனவும், ஏற்கனவே இம்மருந்துகளை உபயோகித்து வருபவர்கள் அதனை உடனடியாக நிறுத்துமாறும் அமைச்சகம் அறிவித்துள்ளது.

  • ஜுல்மேண்டின் 375 mg (Julmentin 375 mg) – நுரையீரல் மற்றும் காதுகளில் ஏற்பட்டுள்ள பாக்டீரியா தொற்று மற்றும் சைனஸ் பிரச்சனைகளுக்கு வழங்கப்படும் மருந்து.
  • முகோலைட் சிரப் (Mucolyte syrup) – சளி சுரப்பைக் கட்டுப்படுத்த உதவும் மருந்து
  • பியூடலின் 2,4 mg (Butalin 2, 4 mg) – மூச்சுக்குழாய் அழற்சி, ஆஸ்துமா மற்றும் நுரையீரல் அடைப்பிற்காக உபயோகிக்கப்படும் மருந்து.
  • லிப்கார்ட் 10mg  (Lipigard 10mg) – கொழுப்பைக் கட்டுப்படுத்த வழங்கப்படும் மாத்திரை
  • ஸ்கோபினல் சிரப் (Scopinal syrup) – பெருங்குடல் பிரச்சினைகளுக்கு வழங்கப்படும் மருந்து.
  • சுப்ராப்ராக்ட் (Supraproct) – மூல நோய் மற்றும் தடிப்புகளுக்கு வழங்கப்படும் மருந்து.
  • குபிசோன் 20 mg (Gupisone 20 mg) – அலெர்ஜிக்களுக்கு வழங்கப்படும் மாத்திரை.

அதேபோல, குழந்தைகளுக்கு வலி நிவாரணி மற்றும் அழற்சிகளுக்கு வழங்கப்படும் ப்ரோஃபெனால் (Profenal) மருந்தைத் திரும்பப் பெற ஏற்கனவே அந்நிறுவனத்திற்கு உத்தரவிட்டிருப்பதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த மருந்தானது அங்கீகரிக்கப்பட்ட நிபந்தனைகளை பூர்த்தி செய்யவில்லை எனவும், பாட்டிலை குலுக்கிய பின்னரும் பாட்டிலினுள் வீழ்படிவு இருப்பதாகவும் அமைச்சகத்தின் அறிக்கையில் சுட்டப்பட்டுள்ளது.

இந்த மருந்துகளைத் திரும்பிப் பெறும் நடவடிக்கைகளைத் தொடர்ந்து கவனித்து வருவதாகவும், உள்ளூர், சர்வதேச நிறுவனங்களுடன் தொடர்ந்து இணைப்பில் இருப்பதாகவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது. மக்களின் நலன் மட்டுமே முதன்மையானது எனவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேற்கண்ட மருந்துகளை உபயோகித்து அதனால் பக்கவிளைவுகள் ஏற்பட்டவர்கள்/அதுகுறித்த சந்தேகம் இருப்பவர்கள் pv@moh.gov.ae என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ, அமைச்சகத்தின் இணையதளத்திலோ, UAE RADR ஆப் மூலமாகவோ தங்களைத் தொடர்புகொள்ளலாம் என அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், இதுகுறித்த புதுப்பிக்கப்பட்ட தகவல்களைப் பெற அமைச்சகத்தின் இணையதளத்தை நேரடியாக அணுகவும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.